Last Updated : 18 Oct, 2024 04:01 PM

 

Published : 18 Oct 2024 04:01 PM
Last Updated : 18 Oct 2024 04:01 PM

திருமுல்லைவாயல் பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அவதி!

பொருளாதார தேவைகளுக்காக பொதுமக்கள் கால்நடைகளை வளர்க்கின்றனர். கால்நடை வளர்ப்பு என்பது செல்லப்பிராணி வளர்ப்பு போன்றதல்ல. மாடு வளர்ப்போர் ஒவ்வொரு மாட்டுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், சென்னை போன்ற நெரிசல் மிக்க நகரங்களில் தங்களது வீட்டை சுற்றி பொது இடங்களிலேயே மாட்டை கட்டி வைக்கின்றனர். மாடுகளுக்கு ஏதுவான மேய்ச்சல் நிலம் இல்லாததாலும், மாடுகளுக்கு தீவனம் வாங்கிப்போட முடியாததாலும் மாடுகளை சாலைகளில் மேய விடுகின்றனர்.

மாடுகள் சாலைகளில் மேய்வதால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது தொடர்கதையாகி வருகிறது. பல இடங்களில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் முட்டி பொதுமக்கள் காயம் அடைந்தசம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. பள்ளி சிறுமி முதல், வயதான மூதாட்டி வரை பலர் மாடுகளால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

பொதுவாக பொதுமக்களுக்குஇடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை மாநகராட்சிஊழியர்கள், பிடித்து கால்நடைதொழுவங்களில் அடைக்கின்றனர். மேலும், மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கின்றனர்.

ஆனாலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை. குறிப்பாக, புறநகர் பகுதிகளில் சாலைகளில் ஆடி அசைந்து நடைபோடும் மாடுகளால் வாகன ஓட்டிகளும், சாலையில் நடந்து செல்வோரும் அச்சத்துடனே சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அந்த வகையில், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல், சோழபுரம், சோளம்பேடு சாலையில் அதிகளவில் மாடுகள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சோளம்பேடு சாலையில், கண்ணன் தியேட்டர் அருகில் மாடுகள் நடமாட்டம் அதிகளவில், இருக்கிறது. அதுவும் இரவு நேரத்தில் சாலையில் உலா வரும் மாடுகள் குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் பகுதிகளில் மேய்ந்து வருகின்றன.

அப்போது, அந்த வழியாக நடந்து செல்வோரையும், வாகனஓட்டிகளையும் முட்டித் தள்ளுவது போன்ற செயல்களில் மாடுகள் ஈடுபடுகின்றன. இதனால், அந்தபகுதியை கடக்கும்போது பொதுமக்கள் அச்சத்துடனே கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

திருமுல்லைவாயல் சோளம்பேடு சாலையில் இரவு நேரத்தில் வாகன
ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

பள்ளி, கல்லூரிசெல்லும் மாணவர்களும் அந்த சாலையைஅதிகம் பயன்படுத்துகின்றனர். அதுவும் மாலை நேரங்களில் டியூசன் சென்று வரும் சிறுவர் - சிறுமிகள்ஒவ்வொரு நாளும் சாலையில் சுற்றித்திரியும் இந்த மாடுகளுக்கு பயந்து சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த பகுதியில்,வசிக்கும் மக்கள் குப்பைகளை சாலையின் ஓரத்திலேயே கொட்டிவிட்டு செல்வதால்தான் மாடுகள் அங்கு மேய வருவதாகவும், அதனால் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டுவதை தடுப்பதோடு, மாடுகளை பிடித்து தொழுவத்தில் அடைத்து உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அம்பத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலமுருகன் கூறுகையில், ‘திருமுல்லைவாயல் சோளம்பேடு சாலையில் இரவு நேரத்தில் அதிகளவில் மாடுகள் நடமாடுகிறது. இதனால், சாலையின் குறுக்கே மாடுகள் நிற்பது சில சமயங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல், மாட்டின் மீது மோதி விபத்துகளும் ஏற்படுகிறது. அந்த பகுதியில் அதிகளவில் மாடுகள் நடமாடுவதற்கு, அங்கு சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளே காரணம்.

மாடுகளுக்கு சரிவர தீவனம் கிடைக்காமல் குப்பைகளை உட்கொள்வதற்காக அங்கு வருகின்றன. காலை நேரத்தில் மாடுகள்வருவதில்லை. மாலை நேரத்துக்கு பிறகு அங்கு அதிகளவில் மாடுகள் கூடுகின்றன. இது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது.

போதுமான தீவனம்,தண்ணீர் கொடுக்காமல் மாடுகளை துன்புறுத்துவதோடு, சாலைகளில் மேயவிட்டு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மாடு வளர்ப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x