Published : 18 Oct 2024 04:00 PM
Last Updated : 18 Oct 2024 04:00 PM

குப்பை வாகனங்களில் செல்லும் தூய்மை பணியாளர்கள்!

சென்னை, வால்டாக்ஸ் சாலையில் மாநகராட்சியின் குப்பை அகற்றும் பேட்டரி வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். படம்: ச.கார்த்திகேயன்

சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதில் தினந்தோறும் 6 ஆயிரத்து 150 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் மாநகராட்சி மற்றும் தனியார் என மொத்தம் 18 ஆயிரத்து 845 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறது. மற்ற 10 மண்டலங்களில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

பெரும்பாலான மண்டலங்களில் தற்போது, பேட்டரியால் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலமாக வீடு வீடாக சென்றுகுப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. மாநகராட்சிக்காக தூய்மைப் பணியில் ஈடுபடும் அர்பேசர் ஸ்மித் போன்ற நிறுவனங்கள் பேட்டரி வாகனங்களை முறையாக பராமரிக்கின்றன. பேட்டரி வாகனங்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்படுவதில்லை. அதனால் அர்பேசர் ஸ்மித் சார்பில் பேட்டரி வாகனங்களை இயக்குவோர் மற்றும் உதவியாளருக்கு அந்நிறுவனமே விபத்து காப்பீடு செய்து கொடுக்கிறது.

ஆனால் மாநகராட்சியில் இயக்கப்படும் பேட்டரி வாகனங்களில் பெரும்பாலானவை பிரேக் பிடிக்காமல், சரியான வேகமெடுக்காமல், உடைந்து, நசுங்கிய நிலையில், பேட்டரி வேலை செய்யாமல், தூய்மை இன்றி, சைடு மிரர் இன்றி, எலும்புக்கூடு போன்று மோசமாக, உரிய பராமரிப்பின்றி உள்ளது. இந்த வாகனங்களை இயக்குவோருக்கு மாநகராட்சி எந்த காப்பீடும் செய்து தருவதில்லை. மாநகராட்சியில் நேரடியாக 4 ஆயிரத்து 460 ஒப்பந்த பணியாளர்கள் உட்பட 9 ஆயிரத்து 650 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர், தூய்மை இல்லாத பேட்டரியால் இயங்கும் குப்பை அகற்றும் வாகனங்களிலேயே அழைத்துச் செல்லப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, சென்னை சென்ட்ரல் அருகில் வால்டாக்ஸ் சாலையில் தூய்மைப் பணியாளர்கள் பேட்டரி வாகனத்திலேயே அழைத்துச் செல்லப்பட்டனர். துர்நாற்றத்தையும், சுகாதார கேட்டையும் சகித்துக்கொண்டே பணியிடங்களுக்கு தூய்மைப்பணியாளர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி செங்கொடிசங்க பொதுச்செயலாளர் சீனிவாசலு கூறும்போது, "மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்களின் நலனை கருதில் கொள்வதே இல்லை. தூய்மைப் பணியாளர்களுக்கான துடைப்பங்களை தூய்மைப் பணியாளர்களே சொந்த செலவில் தான் வாங்கி பயன்படுத்துகின்றனர். அவர்களை குப்பை அகற்றும் பேட்டரி வாகனங்களில் அழைத்து செல்வது, அவர்களை இழிவுபடுத்துவதற்கு சமம். இதில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால், இழப்பீடும் பெற முடியாது. எனவே இதுபோன்ற வாகனங்களில் தூய்மைப் பணியாளர்களை அழைத்துச் செல்வதை மாநகராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "குப்பை வாகனங்களில் தூய்மைப் பணியாளர்களைஏற்றி செல்வது தவறான செயல். அச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு தூய்மைப் பணியாளர்களை அழைத்துச் செல்லக்கூடாது என அனைத்து மண்டலங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x