Last Updated : 18 Oct, 2024 02:20 PM

12  

Published : 18 Oct 2024 02:20 PM
Last Updated : 18 Oct 2024 02:20 PM

“கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது?” - சீமான் கேள்வி

சீமான்

விழுப்புரம்: மழை நீர்க்கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விக்கிரவாண்டியில் இன்று (அக்.18) நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ஒரு தலைநகரம் தன் அடிப்படை வசதியை ரூ.2.500 கோடி இருந்தால்தான் சீரமைக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் வெள்ள நீரை போக்க நிதி ஒதுக்கப்படுகிறது. மொத்தத்தில் நகர கட்டமைப்பு சரியில்லை. போதுமான மழைப் பொழிவு இருந்தாலும் அது கடலில் கலக்கிறது. அதன் பின் கடல்நீரை சுத்திகரிப்பது என்பது தேவையில்லாதது.

மழை நீரை சேமிக்க திட்டமிடல் இல்லை. தலைநகரே இப்படி இருந்தால் மற்ற மாநகராட்சிகளின் நிலையை எண்ணிப்பாருங்கள். இரு கட்சிகளும் இக்கட்டமைப்பில் தோல்வி அடைந்துள்ளதால் தொடர்ந்து வாக்களித்த மக்கள் தோற்றுக்கொண்டு வருகிறார்கள். கால்வாய்க்கு ஒதுக்கும் நிதி வாய்க்குள் சென்றால் என்ன செய்வது? ஆளுநரை மாற்றச் சொன்ன திமுக இப்போது பாராட்டுகிறது. தற்போது பாஜக கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது.

மற்ற மாநில முதல்வர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர்களை பிரதமர் சந்தித்து உள்ளாரா? இதன் மூலமே திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது உறுதியாகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பாஜக அமைச்சர் வரவில்லை. ஆனால், கூட்டணியில் இல்லாதபோதும் கலைஞர் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார் என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

பாஜகவுக்கு நாங்கள் ஏ டீம் என்றால் திமுக பி டீம் அவ்வளவுதான். இந்தியா என்பது உருவாக்கப்பட்டது. அதில் ஒரே மொழியை வலியுறுத்தினால் தேச ஒற்றுமை கேள்விக்குறியாகும். இந்தி மாதம் தூர்தர்ஷன் நடத்துகிறது. தமிழக அரசு எங்களை தமிழ் வாரம் நடத்த அனுமதிப்பார்களா? இலங்கையில் எல்லைதாண்டி வருபவர்கள் மீனவர் என்பது பிரச்சினை இல்லை. தமிழன் என்பதுதான் பிரச்சினை.

சுயமரியாதைக்காக இயக்கம் தொடங்கியவர்கள் எங்கெங்கோ விழுந்து கிடக்கிறார்கள். இறந்து போன சம்ஸ்கிருதத்தை உயிர்பிக்க ஆர்எஸ்எஸ் துடிக்கும்போது இறந்து கொண்டிருக்கும் தமிழை வாழவைக்க தமிழன் ஆளவேண்டும். அவன் தமிழனாய் இருக்கவேண்டும். பாஜக இந்தியை திணிக்கவில்லை. சம்ஸ்கிருதத்தை திணித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x