Published : 18 Oct 2024 01:47 PM
Last Updated : 18 Oct 2024 01:47 PM

“தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது” - முத்தரசன் 

இரா.முத்தரசன் | கோப்புப்படம்

சென்னை: “தேசிய நுகர்வோர்’ கூட்டுறவு இணையத்துக்கு வழங்கப்பட்ட கொள்முதல் அனுமதி அனைத்தையும் ரத்து செய்து, மறைந்த முதல்வர் கருணாநிதி அரசு உருவாக்கிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை பாதுகாத்து, அதன் செயலாற்றலை விரிவுபடுத்த வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலை வேண்டும் என தீவிரமான போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, விவசாயிகளிடம் நெல் உள்ளிட்ட விளை பொருட்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்து, அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பொது விநியோக திட்டத்தில் நியாய விலையில் வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகம் அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பணியாளர்கள், தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். பல்லாயிரக்கணக்கில் விவசாயிகளும், பொது மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் நவதாராளமயக் கொள்கையின் விளைவாக பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டு, தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக உணவுத்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற பன்மாநில கூட்டுறவு அமைப்பை உருவாக்கி, மாநிலங்களில் அதன் செயல்பாட்டு எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த அமைப்புக்கு தமிழகத்தில் ‘டெல்டா மாவட்டங்கள்’ நீங்கலாக மற்ற மாவட்டங்களில் ‘முகவர்களை’ நியமித்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது இந்த நிறுவனம் டெல்டா மாவட்டங்களிலும் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நுகர்பொருள் வாணிபக் கழகம் உட்பட ஆயிரக்கணக்கான கூட்டுறவு அமைப்புகளின் உரிமைகளை பறித்து அவைகள் மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் எடுத்துச் செல்லும் அபாயகரமானது. இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உருவாக்கியதன் நோக்கத்தை அடியோடு அழித்து, விவசாயிகள் நுகர்வோர் என இரு தரப்பினரும் ‘தனியார் வணிக சந்தைக்கு’ தள்ளப்படுவார்கள். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் ஆற்றலை தமிழக அரசு இழந்து நிற்கும் அவலம் ஏற்படும்.

இதை, தமிழக அரசின் கவனத்துக்கு தெரிவித்து ‘தேசிய நுகர்வோர்’ கூட்டுறவு இணையத்துக்கு வழங்கப்பட்ட கொள்முதல் அனுமதி அனைத்தையும் ரத்து செய்து, மறைந்த முதல்வர் கருணாநிதி அரசு உருவாக்கிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை பாதுகாத்து, அதன் செயலாற்றலை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசையும், முதல்வரையும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x