Published : 18 Oct 2024 05:26 AM
Last Updated : 18 Oct 2024 05:26 AM

நீதி மற்றும் காவல் துறைகளில் இ-ஃபைலிங் முறை பின்பற்றப்படுகிறதா? - நீதிபதிகள், ஐ.ஜி.க்கள் பதில் அளிக்க உத்தரவு

மதுரை: நீதித் துறை, காவல் துறையில் இ-ஃபைலிங் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பது தொடர்பாக மாவட்ட நீதிபதிகள், ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள் பதில் அளிக்குமாாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் வடமலையைச் சேர்ந்த ஜனார்த்தனன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், "இந்த வழக்கில் போலீஸார் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் அதை எதிர்த்து வழக்குத் தொடரலாம்" என உத்தரவிட்டார்.

இந்நிலையில், தற்போது வரை போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, ஜனார்த்தனன் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், குற்றப்பத்திரிகை இ-ஃபைலிங் முறையில்ஏப். 22-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக அதிகம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில், நீண்டகாலமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருப்பதாக சந்தேகம் எழுகிறது.

வழக்கின் இறுதி அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்த வழக்குகள் மீண்டும்ஏன் விசாரணைக்காக எடுக்கப்படுவதில்லை என்பது தொடர்பான அறிக்கைகளைப் பெற்றபோது, இறுதி அறிக்கைகளில் உள்ள குறைகளை சரி செய்ய மெமோ அனுப்பியும், நினைவூட்டல் வழங்கப்பட்டும் உரிய பதில் வராததால், வழக்குமீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.

நீதிமன்றமும், காவல் துறையும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் வகையில் இருதரப்பிலும் இ-ஃபைலிங் முறையை பின்பற்றவேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக இரு தரப்பும் இ-ஃபைலிங்முறையை சரியாகப் பின்பற்றாமல், ஒருவர் மீது ஒருவர் குற்றம்சுமத்துகின்றனர். இந்த விவகாரத்தில் தவறைக் கண்டறியவும், செயல்திறனை மேம்படுத்தவும் இரு தரப்பிலிருந்தும் சில விவரங்களைப் பெற உயர் நீதிமன்றம் விரும்புகிறது.

எனவே, கடந்த ஓராண்டில் நீதித்துறை நடுவர் மன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையில் எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கைகள், குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? அதன் பின்னர்எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன? விசாரணைக்கு எடுக்கப்படாமல் எத்தனைவழக்குகள் உள்ளன? தவறுகளைசரிசெய்வதற்காக எத்தனை வழக்குகளில் மெமோ அனுப்பப்பட்டது? குறைகள் சரி செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை என்பது குறித்து மதுரை உட்பட 14 மாவட்டமுதன்மை நீதிபதிகள், தென் மண்டல, மத்திய மண்டல ஐ.ஜி.க்கள், மதுரை, திருச்சி, நெல்லை காவல் துறை ஆணையர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக். 21-க்குதள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x