Published : 18 Oct 2024 06:00 AM
Last Updated : 18 Oct 2024 06:00 AM

நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன்? - போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கி அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம், கூடுதல் வட்டி,நிலம் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி முதலீடு வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி,நிறுவன இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில், வீரசக்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சார்லஸ், இளையராஜா ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஜெயின்குமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். மேலும், தேடப்பட்டு வரும் செந்தில்வேலு என்பவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்து, "இதுவரை எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என கேள்வி எழுப்பினார்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில், "இந்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பொருளாதார குற்றப் பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறைச் செயலரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. காலஅவகாசம் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, "இந்த வழக்கில் என்னதான் நடக்கிறது? இன்னும் எவ்வளவு நாள் அவகாசம் தேவைப்படும்? சொத்துகளை வழக்கில் இணைத்து, அரசாணை வெளியிடுவதைத் தாமதிக்கக் காரணம் என்ன?இனியும் காலஅவகாசம் வழங்க முடியாது. வரும் 19-ம் தேதிக்குள் நியோமேக்ஸ் சொத்துகளை இணைத்து, அரசாணை வெளியிட வேண்டும். தவறும்பட்சத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி மற்றும் உள்துறைச் செயலர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும்" என எச்சரித்து, விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x