Published : 17 Oct 2024 05:17 PM
Last Updated : 17 Oct 2024 05:17 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டம், கோவில் தேவராயன்பேட்டை மத்ஸபுரீஸ்வரர் கோயிலைச் சுற்றி இந்தியத் தொல்லியியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி-யான பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
கோவில் தேவராயன்பேட்டையில் உள்ள சுகுந்தகுந்தாளம்மன் உடனாய மத்ஸபுரீஸ்வரர் கோயிலுக்கு இன்று வருகை தந்த பொன்.மாணிக்கவேல், கிராம மக்களுடன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கடந்த ஜூன் 14-ம் தேதி கோயிலின் தெற்கு மடவளாகத்தில் பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 13 சுவாமி சிலைகளை மீண்டும் இந்தக் கோயிலிலேயே வழிபாட்டிற்கு வைக்க வேண்டும், இந்தக்கோயிலை பாதுகாக்கப்பட்ட புராதன திருக்கோயிலாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொன்.மாணிக்கவேல் மற்றும் கிராமத்தார் அந்தக் கோயிலில் உள்ள விநாயகர் மற்றும் அம்மனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி, வழிபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல் கூறியது: “பராந்தக சோழனால் கட்டப்பட்ட 1063 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலுக்கு ஏராளமான தெய்வ திருமேனிகள் வழங்கப்பட்டுள்ளது. கி.பி.950 – 969ம் ஆண்டுகளுக்குள் செம்பியன் மாதேவி என்ற பெண் சிவனடிகள் காலத்தில் தான் தெய்வ திருமேனிகள் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், மத்ஸபுரீஸ்வரர் சுவாமி கருவறையில் இருந்து இறைவியான போக சக்தி அம்மனின் பஞ்சலோக சிலை கடந்த 1974-ம் ஆண்டு மாயமானது.
இச்சிலையானது தற்போது நியூயார்க் நகரத்தில் மேன்ஹட்டனில் உள்ள ஏலக் கூடத்தில் உள்ளது. இந்தச் சிலையை தற்போது ஏலத்திற்கு விடத் தயாராக இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இதைத் தடுத்து நிறுத்தவிட்டால் ஏலத்தில் வசதிபடைத்தவர்கள் அதை வாங்கிச் சென்று விடுவார்கள். எனவே, இது தொடர்பாக எம்எல்ஏ, எம்பி, மத்திய கலச்சாரத்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இந்தச் சிலையை மீட்டு திருவாரூரில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்காமல் இந்தக் கோயிலிலேயே வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தத் தொகுதி எம்எல்ஏ, எம்பி, மத்திய, மாநில தொல்லியல்துறை அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் ஒரு குழுவாக, புதுடெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து, அந்தச் சிலை ஏலத்தை நிறுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இச்சிலை தொடர்பாகக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கையில் சைவர்கள் மிகுந்த மென்மையானவர்கள் என்பதால் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகள் இப்போது எங்கே உள்ளது என அதிகாரிகள் கூற மறுக்கிறார்கள். இது தொடர்பாகக் கோயில் செயல் அலுவலர் பதில் கூறவில்லை என்றால், அவரை கோயிலுக்கு உள்ளே விடக்கூடாது. மேலும், கோயில் வருமானத்தில் ஊதியம் பெறும் அவர், 14 சிலைகள் குறித்து, கிராம மக்களிடம் தெரிவித்து, அந்தச் சிலைகளை உடனே கோயிலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு 2012-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு 2,622 சிலைகளை அமெரிக்காவில் இருந்து மீட்டுள்ளேன். ஓய்வு பெற்ற பிறகு 8 சிலைகள் தொடர்பாக நெருக்கடி கொடுத்து புகார் அளித்தேன். காஞ்சிபுரம், தஞ்சாவூர் போன்ற சில மாவட்ட எஸ்பி-க்கள் எஃப்ஐஆர் போடக்கூட தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன். மத்ஸபுரீஸ்வரர் கோயிலில் 14 சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சுற்றுப் பகுதிகளை இந்தியத் தொல்லியியல் துறையினர் இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment