Last Updated : 17 Oct, 2024 05:13 PM

 

Published : 17 Oct 2024 05:13 PM
Last Updated : 17 Oct 2024 05:13 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியில் முதல் பெண் ஒன்றியச் செயலாளர் தேர்வு

ஜெ.வைகைராணி 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பெண் ஒன்றியச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சுமார் 458 கிளைகள் உள்ளன. மொத்தம் 19 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு கட்சி மாநாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கிளை மாநாடுகள் முடிந்து, பல்வேறு இடங்களில் ஒன்றிய மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், அண்மையில் நடைபெற்று முடிந்த திருமயம் ஒன்றிய மாநாட்டில் மாவட்டத்தின் முதல் பெண் ஒன்றியச் செயலாளராக ஜெ.வைகைராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெ.வைகைராணி கூறியது: “கம்யூனிஸ்ட் குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறுவயதிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஈடுபாடு உண்டு. ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தில் பணியாற்றியதோடு, கட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்தேன். இப்போது திருமயம் ஒன்றிய மாநாட்டில் தேர்தல் மூலம் ஒன்றியச் செயலாளராக வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் மாவட்டத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு இந்த ஒன்றியத்தில் கட்சியை வளர்ப்பதோடு, ஏழை, எளியோரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தப் பாடுபடுவேன்” என்றார்.

வரும் டிசம்பர் 2-ம் தேதியில் இருந்து 4-ம் தேதி வரை கீரனூரில் கட்சியின் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, கட்சியின் மாநில செயற்குழு குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளட்டோர் கலந்துகொள்ள உள்ள இம்மாநாட்டில், காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களை அதிகரிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன. இம்மாவட்ட மாநாட்டையொட்டி கந்தர்வக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x