Last Updated : 17 Oct, 2024 04:31 PM

 

Published : 17 Oct 2024 04:31 PM
Last Updated : 17 Oct 2024 04:31 PM

மாமூல் கேட்டு ரவுடிகள் தாக்குதல் - புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்

புதுச்சேரி: மாமூல் கேட்டு ரவுடிகள் தாக்குதல் நடத்தியதால் வியாபாரி காயமடைந்தார். இந்நிலையில், அவருக்கு சிகிச்சை தராமல் அலைக்கழிக்கப்பட்டதால், சுயேச்சை எம்எல்ஏ தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் இந்திரா காந்தி சிலை அருகே தனியார் பார் அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் சந்திரன். இவரது கடைக்கு நேற்று இரவு வந்த 3 ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். சந்திரன் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ரவுடிகள், கடையிலிருந்த சோடா பாட்டில் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சந்திரனை தாக்கியுள்ளனர். இதையடுத்து சந்திரன் கூச்சல் போட்டதால் அவர்கள் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து, கை, தலையில் காயமடைந்த சந்திரன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதுலுதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இன்று காலை சாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறும்படி சந்திரனுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அவர்கள் சொன்னபடி இன்று காலை அவர் சாரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.ஆனால் அங்கிருந்தவர்கள், தங்களிடம் ஸ்கேன் வசதி இல்லை என்று சொல்லி அவரை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து சந்திரன் மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே, மாமூல் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி டிஜிபி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு தலைமையில் பொது நல அமைப்பினர் கூடினர். அப்போது வியாபாரி சந்திரன் சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அறிந்து உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, சந்திரனுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

இதையடுத்து, போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சுகாதார இயக்குநர், அதிகாரிகள் அங்கு வரவேண்டும் என பொதுநல அமைப்பினர் வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டத்தில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுநல அமைப்பினர், வியாபாரி சந்திரனை ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து அங்கிருந்து தள்ளிக் கொண்டு, ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் சட்டப்பேரவையைக் கடந்து, ஆளுநர் மாளிகை முன்பு வந்தனர். அங்கு ஸ்ட்ரெக்சரை நிறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனால், அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களை ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் இருந்து அப்புறப்படுத்தி, பாரதி பூங்கா நுழைவு வாயில் அருகே நிறுத்தினர். தகவலறிந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன் எம்எல்ஏ ஆகியோரும் அங்கு வந்தனர். அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதனால் ஆளுநர் மாளிகை முன்பு மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி சரியாக செயல்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டோர் நாராயணசாமியிடம் தெரிவிக்க, இங்கு அரசியல் வேண்டாம் என அவர் பதில் தர தொடர்ந்து இருத்தரப்பும் பேசியபடி இருந்தனர். அரசுச் செயலரோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ நேரில் வந்து பேசினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தில் இருந்தவர்கள் வலியுறுத்தினர். இதனால் போராட்டம் நீடித்தது. பின்னர் சுகாதார துறை பொறுப்பு இயக்குநர் செவ்வேல் அங்கு வந்து அவர்களுடன் பேசினார்.

இதையடுத்து, போலீஸார் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸை கொண்டு வந்தனர். அதில் வியாபாரி சந்திரனை சிகிச்சைக்காக ஏற்றினர். ஆனால், ஆம்புலன்ஸில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை. இதனால், “வியாபாரி என்றால் அலட்சியமா அரசு அதிகாரி காயமடைந்தால் இப்படி செய்வீர்களா?” எனக்கூறி, “மருத்துவர் வந்தால்தான் ஆம்புலன்ஸை எடுத்துச் செல்ல அனுமதிப்போம்” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதனால் போலீஸாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து மருத்துவர் அங்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து வியாபாரி சந்திரனை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வரை நேரில் சந்தித்து முறையிட சட்டப்பேரவைக்குச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x