Published : 17 Oct 2024 02:36 PM
Last Updated : 17 Oct 2024 02:36 PM
சென்னை: சென்னை தெற்கு மாவட்டம் முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போர்க்கால நிவாரணப் பணிகள் அடிப்படையில் ஒரே நாளில் சென்னை சகஜ நிலைக்குத் தொடங்கி மக்கள் நிம்மதிபெருமூச்சுவிடத் தொடங்கி அன்றாடப் பணிகளை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் சென்னை தெற்கு மாவட்டம் முழுவதும் மாவட்ட கழக செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (16-10-2024) காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை மருத்துவ முகாம்கள் தொடங்கி வைத்தல், சுரங்கப் பாதைகள் ஆய்வு, அடையாறு ஆற்றங்கரையோரம் நீரேற்றம் குறித்து ஆய்வு, நிவாரணப் பணிகள் ஆய்வு, சமையல்கூட சமையல் பணிகள் ஆய்வு, மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மழைநீர் வெளியேற்றம், கால்வாய் பகுதியில் மழைநீர் வெளியேற்றம் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.
முன்னதாக காலை 8.30 மணிக்கு மைலாப்பூரில் தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சைதாப்பேட்டை பஜார் சாலை மிகவும் பள்ளமான பகுதியாதலால் அங்கு மழைநீர் வெளியேற்றுவதற்கு துரித நடவடிக்கையை முடுக்கிவிட்டார்.
அதனையடுத்து காலை 9 மணியளவில் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு நடைபெற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். காலை 9.30 மணியளவில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்குச் சென்று அங்கு மழைநீரேற்றம் குறித்து பார்வையிட்டார். காலை 10 மணியளவில் சைதை மேற்கு பகுதி சைதாப்பேட்டை 142வது வார்டில் பருவக் கால நோய்கள் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
அதனையடுத்து காலை 11 மணியளவில் சைதை கிழக்குப் பகுதி சித்ரா நகரில், அப்பாவு நகரில் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். மழை வெள்ளப் பாதிப்படைந்த கோட்டூர்புரம் பீலியம்மன் கோயில் தெரு, ஜிப்ஜி காலனி பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்து அப்பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.
காலை 11.30 மணியளவில் விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள மழைநீர் வெளியேறும் கால்வாயில் மழைநீர்வெளியேற்றம் குறித்து நிர்வாகிகளுக்கும், அரசு உயரதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். நண்பகல் 12 மணியளவில் மதுரவாயல் தெற்கு பகுதியில் உள்ள வளசரவாக்கத்தில் மழைநீர் வெளியேறுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
மதியம் 2 மணிக்கு சோழிங்கநல்லூர் மேற்குப் பகுதி மடிப்பாக்கம் மயிலை பாலாஜி நகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நடைபெற்று வந்த சமையல்பணிகளை ஆய்வு செய்தார். சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினோடு தாமஸ்மலை தெற்கு ஒன்றியம் கோவிலம்பாக்கம் சுண்ணாம்புக்கொளத்தூரில் மழைநீர் வெளியேற்றம், மழைக்கால நிவாரணப் பணிகள் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
வேளச்சேரி மாலை 5 மணியளவில் தமிழக முதல்வர் மழைநீர் பாதிப்பு மற்றும் வெள்ளநிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவிலம்பாக்கம் நாராயணபுரம் ஏரி உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிவாரணப் பணிகளில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் அனைத்து அணிகளைச் சார்ந்த நிர்வாகிகள், கழகத் தோழர்கள் ஏராளமான அளவில் மிகத் துரிதமாக மழைக்கால நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT