Published : 17 Oct 2024 01:01 PM
Last Updated : 17 Oct 2024 01:01 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்; ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் அதிருப்தி

கோப்புப் படம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஓரேசமயத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர், அரசியல்வாதிகள் நிர்பந்தம் காரணமாக இந்த பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பி.ஜே.கலைச்செல்வன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த பி.உ.அரி பாஸ்கர் ராவ், திருப்போரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) பி. பூமகள் தேவி அதே ஒன்றியத்தில் வட்டார ஊராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்ட அலுவலராக இருந்த வி.மீனாட்சி திருக்கழுக்குன்றம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய (கிளை ஊராட்சி) வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த எம்.வெங்கட்ராமன் அதே ஒன்றியத்தில் வட்டார ஊராட்சி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்து வந்த ஏ. மாலதி, வெங்கட்ராமன் பணிபுரிந்த பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ஆ. சசிகலா, காட்டாங்கொளத்தூர் வட்டார ஊராட்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சிவா கலைச்செல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேற்படி அலுவலர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த பணியிட மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாக ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை அரசியல் அழுத்தம் காரணமாகவே பணியிட மாற்றம் செய்வது தெளிவாக தெரிகிறது. ஆளுங்கட்சியின் நிர்பந்தத்திற்கு அடிபணியாத அலுவலர்கள் பந்தாடப்படுகின்றனர்.

ஆளும் கட்சி செல்வாக்கு உள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடம் கிடைக்கிறது. மேலும், பின்தங்கிய பகுதிகளான இலத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் போன்ற பகுதியில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு நகரப் பகுதியை ஒட்டியுள்ள ஒன்றிய அலுவலகத்திற்கு மாறுதல் கிடைப்பதில்லை. அரசியல்வாதிகளின் செல்வாக்கு இருந்தால் தாங்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலாகிச் செல்லலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பணியிட மாற்றம் செய்யப்படுவதில் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசியல் அழுத்தம் காரணமாக அதிகாரிகளை பந்தாடுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x