Published : 10 Jun 2018 04:08 PM
Last Updated : 10 Jun 2018 04:08 PM
புதுச்சேரி பாண்லே நிறுவனத்தில் பால் பாக்கெட்களுடன் ஐஸ்கிரீம், குல்பி, சாக்லெட், வாசனை பால், மோர், நெய் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவைகள் பாண்லே பூத்கள் மட்டுமின்றி 125 முகவர்கள் மூலமும் விற்கப்படுகின்றன.
புதுச்சேரியில் பல்வேறு நிறுவனங்களின் பால் விற்பனை செய்யப்பட்டாலும் மக்களின் முதல் தேர்வாக, அரசின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே பால் தான் இருந்து வருகிறது.
நாட்டில் உள்ள பல்வேறு பால் நிறுவனங்களின் பால் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், சிறந்த பால்களில் பாண்லே பாலும் ஒன்று என்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக புதுச்சேரி மக்களிடத்தில் பெரும் வர்த்தக சுழற்சியை பெற்றிருக்கிறது பான்லே பொருட்கள்.
அந்த வகையில் பாண்லேவில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிரீம், சாக்லெட், குல்பி ஆகியவைகளும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது கோடை முடிந்தாலும் மக்கள் பாண்லே முகவர்களிடம் சென்று ஐஸ்கிரீம் வகைகளை அதிகளவு விரும்பி கேட்கின்றனர். தனியார் ஐஸ்கிரீமை விட பாண்லே ஐஸ்கிரீம் விலை குறைவு என்பதுடன் தரமும், ருசியும் நன்றாக இருப்பதும் ஓர் காரணம்.
ஆனால் முகவர்கள் தங்களிடம் பாண்லே ஐஸ்கிரீம் இல்லை என்று கூறி வருகின்றனர். இதனால் நுகர்வோர் விலை உயர்வாக உள்ள பிற தனியார் ஐஸ்கிரீம்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஐஸ்கிரீம் தட்டுப்பாடு குறித்து முகவர்கள் கூறியதாவது:
பாண்லே நிறுவனத்தை அதிகாரிகள் தான் சீரழித்து வருகின்றனர். கோடைக்காலம் தொடங்கியது முதல் ஐஸ்கிரீம், குல்பி, வாசனை பால் ஆகியவைகளை தராமல் இருந்து வருகின்றனர்.
அட்டை பெட்டி இல்லை, பாட்டில் இல்லை என்ற காரணத்தையே குறிப்பிடுகின்றனர். உண்மையில் தனியார் நிறுவனத்தை ஊக்குவிப்பதற்காக இதுபோல் செய்வதாகவே தெரிகிறது. மக்கள் விரும்பும் பாண்லே பொருட்களை விற்பனை செய்வது அவசியம் என்று கூறுகின்றனர்.
புதுச்சேரி தாவரவியல் பூங்கா அருகேயுள்ள பாண்லே பூத்தில் ஐஸ்கிரீமே இல்லை என்று விடுமுறை நாட்களில் தெரிவிக்கின்றனர்.
விடுமுறை நாட்களில் இங்கு வரும் குழந்தைகள் ஏமாற்றத்துடன் தனியாரை நாடி செல்கின்றனர். அதே போல் வெங்கட்டா நகர் பூங்கா அருகேயுள்ள பாண்லே பூத்தில் மிக குறைந்த அளவில் விநியோகிக்கப்படும் ஐஸ்கிரீம் விரைவாகவே விற்று தீர்ந்து விடுகிறது.
கஸாட்டா. சிறிய கோன் ஐஸ்கிரீம் ஆகியவை பல பகுதிகளில் போதியளவுக்கு இல்லை. நகரில் முக்கியப் பகுதிகளில் பல பாண்லே பூத்களிலும் இப்பிரச்சினையே நீடிக்கிறது. பல ஜஸ்கிரீம் ரகங்கள் தொடர்ந்து விற்பனைக்கே வராத சூழலும் நிலவுகிறது.
இதுதொடர்பான விவரங்களை அறிய பாண்லே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் தொலைபேசியே எடுக்காமல் தவிர்க்கின்றனர் என்று பலரும் குற்றச்சாட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT