Published : 17 Oct 2024 12:52 PM
Last Updated : 17 Oct 2024 12:52 PM

‘தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்கிடுக’ - தமிழக முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

கோப்புப்படம்

சென்னை: தீபாவளி பண்டிகையைக் கொண்டாட அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாக நடப்பு அக்டோபர் மாத சம்பளத்தை, தீபாவளிக்கு முன்பாகவே வழங்க ஆவன செய்யுமாறு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், "இந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி கொண்டாட அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாக நடப்பு அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க ஆவன செய்ய வேண்டுகிறோம். துணிமணி, பட்டாசு, பலகாரங்கள் வாங்க முன்கூட்டியே சம்பளம் வழங்கினால் அது எங்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

கடந்த செப்டம்பர் மாத சம்பளம் மத்திய அரசின் பங்களிப்பு தாமதமான போதும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்பட 32,500 பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் பெரு மனதுடன் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கி உதவியதை போல் இதையும் இந்த நேரத்தில் செய்ய வேண்டுகிறோம். மேலும் பண்டிகை முன்பணம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க ஆணையிட வேண்டுகிறோம்.

முன்பணம் கடனாக வழங்கி அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ள வேண்டுகிறோம். 13 ஆண்டுகளாக தற்போது ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12000 பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் மேம்பட, திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ அரசாணையாக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x