Published : 03 Apr 2014 12:00 AM
Last Updated : 03 Apr 2014 12:00 AM
திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, திமுக கூட்டணியின் வெற்றிக்காக மார்ச் 20 முதல் தனது சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கினார். நடப்பு அரசியல் குறித்து ‘தி இந்து-வுக்கு அவர் அளித்த பேட்டி:
நெருக்கடியான நேரங்களில் கைதூக்கிவிட்டவர்கள் என்கிற நன்றியை மறந்து திமுக-வுக்கு துரோகம் இழைத்துவிட்டது காங்கிரஸ் என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. காங்கிரஸுக்கு அப் படி என்னதான் கைகொடுத்தது திமுக?
அமெரிக்கா உடனான அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது மார்க்சிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட்களுடன் சேர்ந்து அன்றைக்கு திமுக-வும் ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால் ஆறாண்டு களுக்கு முன்பே காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்கும். ஆனால், அணுசக்தி ஒப்பந்தம் தொடர் பான விவாதத்தின்போதும் காங்கிரஸுக்கு பக்கபலமாக நின்றது திமுக. சில்லறை வணி கத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை திமுக கடுமை யாக எதிர்த்தது. ஆனாலும் இந்த விவகாரத்தில் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்று தேவையில்லாமல் இன்னொரு தேர்தலை திணிக்க திமுக விரும்பவில்லை. அப்போதும் காங்கிரஸ் பக்கம் நின்றது திமுக.
ஈழப் பிரச்சினையிலும் காங்கிரஸால் நாங்கள் பழி சுமந்தோம். அலைக்கற்றை வழக்கில் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் ஆ.ராசா தனது நியாயத்தைச் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தொடர் பில்லை என்றும், இழப்பை ஊழல் என்றும் சித்தரித்தார்கள். சகோதரியார் கனிமொழியையும் ஆறு மாதங்கள் சிறையில் வைத்தார்கள். வழக்கில் எங்களுக்கு உதவ வேண்டும் என்பதில்லை. வழக்கை நியாயமாக நடத்துங்கள் என்றுதான் சொன்னோம். கேட்டார்களா? சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்களுடன் அறிவாலயத்தின் கீழ் தளத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. மேல் தளத்தில் கலைஞர் டி.வி. அலுவலகத்தில் ரெய்டு நடக்கிறது. இந்தக் கொடுமையை எங்காவது கேட்டிருப்போமா?
முக்கியக் கூட்டணிகளில் அங்கம் வகிக்காததால் இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லமுடியாத சங்கடத் தில் இருக்கிறதே திமுக?
திமுக-வுக்கு எந்தச் சங்கடமும் இல்லை. 1989 மற்றும் 1996 நாடாளுமன்றத் தேர்தல்களில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத் தாமல்தான் திமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், பிரதமரை தீர்மானிக்கிற சக்தியாக திமுக-தான் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தத் தேர்தலிலும் திமுகதான் பிரதமரை தீர்மானிக்கும். அம்மாவின் கனவு பகல் கனவாகும்.
இலங்கைக்கு எதிரான அமெரிக் கத் தீர்மானத்தை இந்தியா ஆதரித் திருக்க வேண்டும் என்கிறாரே ப.சிதம்பரம்?
இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஏற்கெனவே இரண்டு முறை கொண்டுவரப்பட்ட போது திமுக தலையிட்டு அதை ஆதரிக்க வைத்தது. இப்போது மத்திய ஆட்சியில் திமுக இல்லை. ஆனாலும் காங்கிரஸ் அரசு இருக்கிறது. இப்போது, தீர்மானத்தை ஆதரிக்காதது அதிகாரிகள் எடுத்த முடிவு என்று ஆட்சியாளர்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது.
திமுக தனக்குத் தேவையான இலாக்காக்களை கேட்டுப் பெற் றுக்கொண்டுதான் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால், நாங்கள் மைனாரிட்டி திமுக அரசுக்கு எந்த நிபந்தனை யும் இல்லாமல் ஐந்தாண்டுகள் ஆதரவு கொடுத்தோம் என்கிறாரே தங்கபாலு?
மாநிலத்தின் நன்மைக்காக மத்திய அமைச்சரவையில் நாங்கள் இடம்பெற வேண்டும் என்று சொன்னோம். ஆனால், காங்கிரஸ் தரப்பிலிருந்து மாநில அரசில் எந்த பங்களிப்பையும் கேட்கவில்லையே.
ஒரு வேளை, தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக பாஜக-வை ஆதரிக்க வேண்டிய சூழல் வந்தால்?
யூகங்களுக்கு என்னால் பதில் சொல்லமுடியாது. ஒரு தேர்தலில் பாஜக-வுடன் சேர்ந்து நாங்கள் செயல்பட்டது உண்மைதான். அப்போதும் எங்கள் கொள்கை களை இழக்கவில்லை.
பல்கலைக்கழகங்களில் சோதிடத்தை பாடமாக வைக்கும் பாஜக-வின் திட்டத்தை திமுக முறியடித்தது. நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தாலும் திமுக கொடியில் உள்ள சிவப்பு நிறம் சிவப் பாகத்தான் இருந்தது; ஒரு போதும் அது காவியாக நிறம் மாறியதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT