Published : 17 Oct 2024 05:40 AM
Last Updated : 17 Oct 2024 05:40 AM

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்த பகுதியிலும் மழைநீர் தேங்கவில்லை: அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்

சென்னை: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை என்று நகராட்சிநிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு நேற்று கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் 48 செ.மீ. மழை பெய்யும் என்றால், கடந்த 15-ம் தேதி ஒரே நாளில்30 செ.மீ. வரை பெய்துள்ளது. இருந்தாலும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், ஒருசில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஒரு சுரங்கப் பாதை தவிர மற்ற அனைத்திலும் போக்குவரத்து நடைபெறுகிறது.

‘வெள்ளச்சேரியாக இருந்ததை வேளச்சேரியாக மாற்றிவிட்டீர்கள்’ என்று காலையில் முதல்வர் வந்து சந்தித்தபோது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். நாராயணபுரம் ஏரி பகுதியில் இந்த ஆண்டில்தான் தண்ணீர் நிற்கவில்லை என்று மக்கள் கூறினர். அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் வடிந்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே ஒவ்வொரு மண்டலத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான பகுதிகளில் 990 மோட்டார்கள்,400 டிராக்டர்கள் மூலம் தண்ணீர்இறைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.70 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு உணவுதயாரிக்க தேவையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 15-ம் தேதி 4.25 லட்சம் பேருக்கும், நேற்று 2.20 லட்சம் பேருக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது.

398 அம்மா உணவகங்களில் 48 ஆயிரம் பேர் உணவு அருந்துகின்றனர். 2 நாட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்ட நிலையில், காலை மட்டும் 65 ஆயிரம் பேர் உணவு அருந்தியுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் அடையாறில் மழைநீர் வடிகால் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. திமுகஆட்சியில் ரூ.2,000 கோடியில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அங்குஉள்ள 4,800 பேருக்கு நிரந்தர வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் 400 கி.மீ. தூரத்துக்கு மட்டுமே மழைநீர் வடிகால் கட்டினர்.

ஆனால், திருப்புகழ் கமிட்டி பரிந்துரைப்படி, தற்போது 1,135 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிந்துள்ளன. மற்ற பகுதிகளில் வேலை நடந்து வருகிறது. வடிகால்கள் கட்டப்பட்டதால்தான் தற்போதுதண்ணீர் வடிந்துள்ளது.

கொசஸ்தலையாறு சீரமைப்புக்கு அதிமுக ஆட்சியில் டெண்டர்விடப்பட்டது. 675 கி.மீ. தூரத்துக்குதற்போது பணிகள் முடிந்துள்ளன. எஞ்சிய பணிகள் நடந்து வருகின்றன. வேளச்சேரி 6 கண் பகுதியில் 780 டன் ஆகாய தாமரை, கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

முதல்வர் மட்டுமின்றி, துணை முதல்வர், அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இரவில் பெய்த மழை காலையில் வடிந்துவிட்டதால் எதிர்க்கட்சியினர் வருத்தத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x