Published : 17 Oct 2024 06:12 AM
Last Updated : 17 Oct 2024 06:12 AM

சென்னையில் கனமழை பெய்தபோதிலும் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை: ஆவின் மேலாண்மை இயக்குநர் தகவல்

சென்னை: கனமழை பெய்தபோதிலும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 2 நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, ஆவின் நிறுவனம் மூலம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 201-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் விநியோகமும், 31 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனைத்து பால் பொருட்களும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், தேவைக்கேற்ப பிற மாவட்டங்களில் இருந்து தேவையான பால், பால் பவுடர் மற்றும் பால் பாக்கெட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் தினசரி 14.50 லட்சம் விட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (அக்.15) கனமழை பெய்தபோதிலும், சென்னை மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப, 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆவின் நிறுவனம் எல்லா காலக்கட்டத்திலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்படுகிறது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்குதடையுமின்றி விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x