Published : 16 Oct 2024 10:41 PM
Last Updated : 16 Oct 2024 10:41 PM

சென்னையில் ரெட் அலர்ட் வாபஸ்: பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து வியாழக்கிழமை (அக்.17) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வியாழக்கிழமை அதிகாலை கரையை கடக்கிறது. இதனையொட்டி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (அக்.16) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது.

இந்த சூழலில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வியாழக்கிழமை இந்த நான்கு மாவட்டங்களுக்கும் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதே போல சென்னையில் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

ஆந்திராவில் கனமழை தீவிரம்: வானிலை மாற்றம் காரணமாக, இன்று பகல் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைப் பொழிவு வெகுவாக குறைந்தது. அதேநேரத்தில், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதாவது, தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் மணிக்கு நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நெல்லூர் மற்றும் திருப்பதி பகுதிகளின் சில இடங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதையடுத்து, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருமாறு முதல்வர் அலுவலகத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x