Published : 16 Oct 2024 06:48 PM
Last Updated : 16 Oct 2024 06:48 PM
சென்னை: தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக 2008-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் மழைநீர் தேங்காமல் சென்றது, என ஆய்வுப் பணியின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிப் பகுதியில் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்ததாக தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.16) இரண்டாம் நாளாக கிண்டி ரேஸ் கோர்ஸ், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் நேரடியாக பார்வையிட்டு, மேற்கொள்ளப்படும் மழைவெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிப் பகுதியில் பொதுமக்கள் ஒன்று திரண்டு தமிழக முதல்வரிடம், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அக்.14 அன்று நள்ளிரவில் பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு செய்து மழைநீர் தேங்காமல் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பணி நடைபெறும்போது மறுபடியும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.
அதன் விளைவாக இப்பகுதியில் நேற்று பெய்த கன மழையின்போதும், 2008-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் மழைநீர் எங்கும் தேங்காமல் சென்றது. துரிதமான நடவடிக்கையினை ஒரே இரவில் மேற்கொண்டமைக்காக இப்பகுதி மக்களின் சார்பாக தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக கூறினார்.” இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT