Published : 16 Oct 2024 05:46 PM
Last Updated : 16 Oct 2024 05:46 PM

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோயில்கள் சார்பில் 5,000 உணவு பொட்டலங்கள் வழங்கல் - தமிழக அரசு

கோப்புப்படம்

சென்னை: சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆளுகைக்குட்பட்ட கோயில்கள் சார்பில் இன்று (அக்.16) 5,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்கப்பட்டன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பெய்து வரும் கன மழையை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மண்டலங்களைச் சேர்ந்த கோயில்கள் சார்பில் இன்று (அக்.16) காலை முதல் உணவு பொட்டலங்கள் தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயில், வடபழனி ஆண்டவர் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில், வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில், பாடி, திருவாலீஸ்வரர் கோயில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில், அமைந்தக்கரை ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணிஸ்வரர் கோயில் ஆகிய கோயில்கள் சார்பில் இன்று காலை 5,000க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. இப்பணிகளை சம்பந்தப்பட்ட கோயில்களின் இணை ஆணையர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x