Last Updated : 16 Oct, 2024 05:11 PM

2  

Published : 16 Oct 2024 05:11 PM
Last Updated : 16 Oct 2024 05:11 PM

“ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பு துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்க” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

கோவை: ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்களாக யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இதனால், ரேஷனில் கிலோ ரூ. 30-க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை, நடுத்தர மக்கள் உள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3,473 டன் மட்டுமே மட்டுமே விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு முன் துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இது ஏழை, நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே, திமுக அரசு தனது தூக்கத்தை கலைத்து, போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு மற்றும பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x