Published : 16 Oct 2024 04:47 PM
Last Updated : 16 Oct 2024 04:47 PM

“சென்னை மழை மீட்புப் பணியில் முதல்வர், துணை முதல்வரை தவிர மற்ற அமைச்சர்களை காணவில்லை” - ராஜேந்திர பாலாஜி

வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி: “சென்னை மழை பாதிப்பின்போது முதல்வர், துணை முதல்வரை தவிர மற்ற அமைச்சர்களை காணவில்லை” என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு தினத்தையொட்டி இன்று கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கட்டபொம்மன் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி அமைதியானவர். அவர் போதகரை அடித்தார் என்று கூறுவது பொய். யார் தூண்டுதலின் பேரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை. உடனடியாக அமைச்சர் கீதாஜீவன் சென்று அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். நடந்தது என்ன என்பது காவல்துறை விசாரணையில் தான் தெரியவரும். சாதாரணப் பிரச்சினையை காழ்புணர்ச்சியால் பெரிதாக்கி உள்ளனர். அதிமுக தலைவர்களில் ஒருவர் எஸ்.பி.வேலுமணி. அவர் மீது வழக்குத் தொடர அரசு நினைக்கிறதா அல்லது அங்குள்ள அமைச்சர் நினைக்கிறாரா எனத் தெரியவில்லை. எனவே, காவல் துறை விசாரணையில்தான் உண்மை தெரியவரும்.

சென்னையில் 6 மணி நேரம் மழை பெய்தால் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. அரசு இன்னும் கவனம் செலுத்தி பணிகள் நடக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். சென்னையில் அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த உடன் அங்குள்ள தங்களது கார்களை காப்பாற்ற அவற்றை மேம்பாலத்தில் கொண்டு நிறுத்திவிட்டனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. கடந்த 2015-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் பெருமழை பெய்தபோது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு முதல்வர், துணை முதல்வர் மட்டும்தான் உழைக்கின்றனர். மற்ற அமைச்சர்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. அவர்களை நீங்கள் நம்பவில்லையா... இல்லை, அவர்கள் உங்களை நம்பவில்லையா? அல்லது மக்களுக்கு சேவை செய்ய அமைச்சர்களுக்கு மனமில்லையா எனத் தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் பதில் சொல்லிக் கொண்டுள்ளார். போட்டோ, வீடியோ மற்றும் விளம்பரம் வருகிறது.

ஆனால், மக்களைக் கேட்டுப் பார்த்தால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சி நடப்பதால் எதுவும் சிறப்பாக நடக்கவில்லை. நலத்திட்ட உதவிகள் உரியவர்களுக்கு போய்ச் சேரவில்லை. சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலும், சோறும் போய்ச் சேரவில்லை. அதிமுக ஆட்சியில் பருவமழை காலத்தில் சரியான முறையில் அணுகியதால் மழை நீர் தேங்கவில்லை. மக்கள் பாதிக்கப் படவில்லை. மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைத்தன. ஆனால், திமுக ஆட்சியில் பருவமழை காலத்தின்போது சென்னை மற்றும் தென்மாவட்ட மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும்.

நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் 90 சதவீத மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது என்றார். அடுத்து வந்த மழையில் இப்போது தான் பணிகளை தொடங்குகிறோம் எனக் கூறினர். துறை அமைச்சர், செயலாளர், மேயர், முதல்வர் என ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்கின்றனர். உண்மையில் நடப்பது என்ன என்பது மர்மமாக உள்ளது. சென்னை மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டால் தான் வாழ முடியும் என்ற நிலை திமுக ஆட்சியில் வந்துவிட்டது" என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x