Published : 16 Oct 2024 03:22 PM
Last Updated : 16 Oct 2024 03:22 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17-ம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும். இதனால், நாளை (அக்.17) சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பும், 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (அக்.15) காலை தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 5.30 மணியளவில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (அக்.16) காலை 8.30 மணியளவில், அதே பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 320 கி.மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 350 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம்-தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17-ம் தேதி அதிகாலை கரையை கடக்கக்கூடும்.

இதனால், இன்று (அக்.16) வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்.17-ம் தேதி, வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்.18-ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்.19 முதல் அக்.20ம் தேதி வரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்.21 முதல் அக்.22ம் தேதி வரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 26 -27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில், இன்றும் (அக்.16), நாளையும் (அக்.17) , வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்.18 முதல் அக்.20 வரையில், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்க கடல் பகுதிகளில், இன்று (அக்.16), தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்.17ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில், இன்றும் (அக்.16), நாளையும் (அக்.17) , கர்நாடக - கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x