Published : 16 Oct 2024 03:09 PM
Last Updated : 16 Oct 2024 03:09 PM
சென்னை: ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்றுள்ள நிலையில், ”மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம். வெற்றி காண்போம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஜம்மு காஷ்மீர் முதல்வராராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான தங்கை கனிமொழியை என் சார்பாகவும் கட்சியின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.
இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம். வெற்றி காண்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்றார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட முதல் முதல்வர் இவர்தான். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். காஷ்மீர் ‘யூனியன் பிரதேச’ அந்தஸ்து தற்காலிகமானது என முதல்வராகப் பதவியேற்ற உமர் அப்துல்லா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT