Last Updated : 16 Oct, 2024 02:21 PM

 

Published : 16 Oct 2024 02:21 PM
Last Updated : 16 Oct 2024 02:21 PM

தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்.21-ல் ரேஷனில் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: “தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்டோபர் 21-ம் தேதி ரேஷனில் வழங்கப்படும். தொடர்ந்து ரேஷனில் இலவச அரிசி தர டெண்டர் விடப்பட்டுள்ளது” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அக்டோபர் 21-ம் தேதி புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ரேஷனில் மாதா மாதம் இலவச அரிசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஏற்கெனவே அறிவித்தபடி, மாற்றுத் திறனாளிக்கான உதவித் தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது மாதம் ரூ.2000 உதவித் தொகை பெறுபவர்கள் இனி, ரூ.3,000 உதவித் தொகை பெறுவார்கள். அதேபோல் ரூ.2500, ரூ.2700, ரூ.3500, ரூ.3800 உதவித் தொகை பெறுவோர் இனி கூடுதலாக ரூ.1000 சேர்த்து பெறுவர். உயர்த்தப்பட்ட உதவித் தொகையின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.24.5 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் 21,329 பயனாளிகள் பயன்பெறுவர். இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகை அக்டோபர் 2024-ம் தேதி முன் தேதியிட்டு நவம்பர் மாதம் முதல் சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

விஜய் கட்சி மாநாட்டு பேனரில் ரங்கசாமியின் படம் இடம் பெற்றிருப்பது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, “விஜய் மாநாட்டுக்கு வாழ்த்துகள். விருப்பம் உள்ளோர் பேனரில் என் படத்தை போடுகிறார்கள். அது அவர்கள் விருப்பம்” என்றார்.

கோயில் நிலங்கள் பற்றிய விவரங்கள் ஆன்லைனில் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டதற்கு, “கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை ஆன்லைனில் வெளியிடும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதற்கான பணிகள் விரைவுப் படுத்தப்பட்டுள்ளன” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x