Published : 16 Oct 2024 06:40 AM
Last Updated : 16 Oct 2024 06:40 AM

2026-ல் அதிமுக ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது: தொண்டர்களுக்கு பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழர்கள் செழித்து வாழ்ந்திட உழைப்போம், உறுதி ஏற்போம். எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காரிருள் சூழ்ந்து காட்டாட்சி நடைபெற்ற நேரத்தில், தமிழக மக்களை மீட்டெடுக்கத் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரமாக எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக-வின் 53-வது ஆண்டுவிழாவை கொண்டாடுகிறோம். அதிமுக தோன்றிய காலக்கட்டத்தில் ஏற்பட்ட அரசியல் சூழலையும், கட்சி தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகளையும் நினைத்துப் பார்க்கிறேன்.

இன்றைக்கு நடைபெறும் இருண்ட கால ஆட்சிதான் அப்போதும், 1972-லிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கருணாநிதியின் அடக்குமுறையையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறிபோராடிய கட்சியின் உணர்வுப்பூர்வமான தொண்டர் வத்தலக்குண்டு ஆறுமுகம் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் திமுகவினரின் அராஜகத்துக்கு பலியாயினர். கட்சிக்காகப் பாடுபட்ட தியாக சீலர்களை எல்லாம் இந்த நாளில் நன்றியோடு நினைவுகூர்வது எனது கடமையென கருதுகிறேன்.

இதுபோன்ற துயரங்களையும் தமிழக மக்கள் படும் துன்பங்களையும் கண்டு வெகுண்டெழுந்த எம்.ஜி.ஆர்., அதிமுகவை 1972-ம்ஆண்டு அக்.17-ல் தொடங்கினார். திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற மாபெரும் வெற்றி, எதிரிகளின் நெஞ்சில் இடியென விழுந்தது. 1977, 1980, 1985 என தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்து பொற்கால ஆட்சியை வழங்கினார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு துணையாக லட்சக்கணக்கான தொண்டர்கள் பின்தொடர அவர்களில் ஒருவராக நானும், என்னைப் போன்றோரும் வெற்றிப் பயணத்துக்கு தோள் கொடுத்து நின்றோம். அதன்பலனாக பிரிந்த கட்சி ஒன்றாக இணைந்து, இழந்த சின்னம் இரட்டை இலையும் கிடைக்கப் பெற்று, புதிய பொலிவோடு புத்தெழுச்சியோடு ஜெயலலிதா தலைமையில் 1991-ல் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி மலர்ந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எண்ணற்ற துரோகங்களை முறியடித்து, ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சியை சிறப்புடன் நடத்தும் ஆசி கிடைத்தது. உட்பகைகொண்டவர்கள் இனி நம் இயக்கத்துக்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம். தமிழர்கள் செழித்து வாழ்ந்திட உழைப்போம், உறுதி ஏற்போம்.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை மலரச் செய்வதற்கு அதிமுகவுக்கு ஆதரவு தர மக்கள் தயாராகிவிட்டார்கள். நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பொன்னான வசந்த காலம் நம்கண்ணெதிரே தெரிகிறது. எத்தனைசக்திகள் எதிர்த்து நின்றாலும் 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. இவ்வாறு கடிதத்தில் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x