Published : 16 Oct 2024 06:31 AM
Last Updated : 16 Oct 2024 06:31 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தரமாக இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணிக்கு நேரடி நியமனங்களை மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018-ல் வழக்கு தொடர்ந்தார். இதில் சட்டக்கல்வி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி பட்டுதேவானந்த், "அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பது துரதிருஷ்டவசமானது" என அதிருப்தி தெரிவித்தார். மேலும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால், அரசு சட்டக் கல்லூரிகளை மூடிவிடுவது நல்லது என காட்டமாக தெரிவித்து, அரசின் சட்டத் துறைச் செயலர்நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிபட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,தமிழக அரசின் சட்டத் துறைச் செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆஜராகி, "அரசு சட்டக் கல்லூரிகளில் நிரந்தரமாக இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று விளக்கம் அளித்தார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் சில விளக்கங்களை கோரியுள்ளது. அவற்றுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும். அதன் பிறகு தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் முறைப்படி வெளியிடும்" என்றார். அதையடுத்து, காலியிடங்களை நிரப்பாமல் தரமான சட்டக் கல்வியை எப்படி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்டு, விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT