Published : 16 Oct 2024 05:50 AM
Last Updated : 16 Oct 2024 05:50 AM

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள குலமங்களம் பகுதியில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா நெற்பயிர்கள். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர் / திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக, நடவு செய்யப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதேநேரத்தில், மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரத்தநாடு அருகே குலமங்களம், சமையன்குடிக்காடு பகுதிகளில் 100 ஏக்கரில்நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வடுவூர் ஏரியிலிருந்து தொடங்கும் கண்ணனாறு மூலம், குலமங்கலம், சமையன்குடிக்காடு, மதுக்கூர், பெரியக்கோட்டை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

இதில், குலமங்களம், சமையன்குடிக்காடு பகுதி வழியாகச் செல்லும் கண்ணனாற்றில், வெங்காயத்தாமரை செடி, கொடிகள் படர்ந்து மழைநீரும், பாசன நீரும் வடிய தடையாக உள்ளது. இதனால், மழைநீர் வடியாமல், அருகில் உள்ள வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், கடந்த 20 நாட்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட இளம் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், குலமங்களத்தில் கண்ணனாற்றின் மேற்கு கரைசேதமடைந்துள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலும் பெய்து வரும் மழை காரணமாக, மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினம் பகுதியில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் சம்பா பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. வடிகால் வாய்க்கால் தூர் வாரப்படாததே இதற்குக் காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மேக மூட்டமாகவே காணப்பட்டது.

மேலும், பல்வேறு இடங்களில் அவ்வப்போது லேசான மழை தூறல் இருந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக காரைக்கால் மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையிலான 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படைக் குழுவினர் நேற்று காரைக்கால் வந்தடைந்தனர். அவர்களை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x