Published : 16 Oct 2024 05:30 AM
Last Updated : 16 Oct 2024 05:30 AM

கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னையில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்த நிலையில், மயிலாப்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், நேற்று சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் மற்றும் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், நீரில் அடித்துவரப்படும் கழிவுகளை பொக்லைன்இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, பேசின் மேம்பாலத்தில் இருந்து, காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்றும் பார்வையிட்டார்.

டிமெல்லோஸ் சாலையில், அதிகமாக மழைநீர் தேங்கும் இடங்களான கே.எம்.கார்டன் மற்றும் புளியந்தோப்பு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். புளியந்தோப்பில் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை மாநகராட்சி முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுடன் பேசி உரிய அறிவுரைகளை வழங்கிய முதல்வர், அவர்களுடன் அருகே உள்ள கடைக்கு சென்று தேநீர் அருந்தினார்.

பெரம்பூர் பிரதான சாலை பகுதிகளில் தேங்கும் மழைநீர், ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு செல்வதை ஆய்வு செய்து, அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர், பிஸ்கட் வழங்கினார். இந்த ஆய்வின்போது, கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

‘முன்கள வீரனாக நிற்பேன்’ - முதல்வர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள, தன்னலம் கருதாமல், நேரம் காலம் பார்க்காமல் நம் துயர் துடைக்க களம் காண்பவர்கள் தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நிவாரண மையங்கள் தயார்: தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1 முதல் 14-ம் தேதி வரை 10.52 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 68 சதவீதம் அதிகம். மழை காரணமாக, நாமக்கல்லில் ஒரு நிவாரண முகாமில் 32 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

85 லட்சம் கைபேசிகளுக்கு மழை முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையில் 444 வீரர்கள் கொண்ட 16 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையில் 10 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 89 மீட்பு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 300 மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 5,147 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

மீட்பு, நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள, மாநிலம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்களாக 37 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி பகுதிக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகள், பணி அலுவலர்கள், 6 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில அவசரகால செயல்பாட்டுமையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x