Published : 15 Oct 2024 09:06 PM
Last Updated : 15 Oct 2024 09:06 PM
சென்னை: மருத்துவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 3 லட்சம் இன்று இளம் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதுகலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டியும், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளம் மருத்துவர்களான முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று நாடு முழுவதும் 700-க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகளில் 3 லட்சம் இளம் மருத்துவர்களின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, விழுபுரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகள்ல் முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் 30 ஆயிரம் பேர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் கனமழை பெய்து வருவதால், தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழக கிளை) தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சங்கத்தின் தமிழக தலைவரும், அகில இந்திய இளம் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான மருத்துவர் கே.எம்.அபுல் ஹாசன் தலைமையில் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் இளம் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். இதுதொடர்பாக மருத்துவர் கே.எம்.அபுல் ஹாசன் கூறுகையில், “நாடு முழுவதும் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என மொத்தம் 3 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 30 பேர் பங்கேற்கவுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளம் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT