Published : 15 Oct 2024 06:35 PM
Last Updated : 15 Oct 2024 06:35 PM
சென்னை: “சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டிருந்தாலும், தாழ்வான இடங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமே உணவு வழங்க இயலும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், ஆதரவற்றோர் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் வயிறார உண்பதற்கு வசதியாக, அதிமுக ஆட்சிக் காலங்களில் மேற்கொண்டது போல், அம்மா உணவகங்களில் மூன்று நேரமும் தரமான உணவை வழங்க உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இன்னும் உணவு வழங்கப்படவில்லை என்று அங்குள்ள மக்கள் கூறுவதை ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. எனவே, உனடியாக அவர்களுக்கு உணவு வழங்க வலியுறுத்துகிறேன். ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக 5 ஆண்டுகளும், உள்ளாட்சித் துறை மற்றும் துணை முதல்வராக 5 ஆண்டுகளும் இருந்தபோது ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.
மாறாக, எனது தலைமையிலான ஆட்சியில் 2020-ம் ஆண்டில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேங்கியிருந்த இடங்கள் பெருமளவு குறைக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி, பொதுப்பணி மற்றும் அறநிலையத் துறைகளுக்குச் சொந்தமான குளம், குட்டைகள்
தூர் வாரப்பட்டன.
சென்னையில் உள்ள 210 நீர்நிலைகளில், 140 நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இப்பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பிறகு ஓராண்டு தாமதத்துக்குப் பிறகே இந்த பராமரிப்புப் பணிகள் துவக்கப்பட்டன. இதனால்தான், கடந்த ஆண்டுகூட பருவ மழையின்போது சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இதேபோன்று, கூவம் மற்றும் அடையாற்றில் வெள்ளநீர் எளிதாக செல்வதற்கு, கரையோரங்களில் வசித்த சுமார் 17,750 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அவர்கள் புதிய குடியிருப்புகளில் நிரந்தரமாக குடியமர்த்தப்பட்டனர்.
48 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வரத்துக் கால்வாய்கள் ரொபோடிக் எக்சவேட்டர், மினி ஆம்பிபியன் வாகனங்கள் கொண்டு தூர்வாரும் பணிகள் ஆண்டு முழுவதும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழைக் காலங்களில் மக்களுக்கு சேவையாற்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்ட (Command and Control Centre) கட்டுப்பாட்டு அறை முழு அளவு பணியாளர்களுடன் சென்னை மாநகராட்சியில் துவக்கப்பட்டு, தொடர்ந்து இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் நிரந்தரத் தீர்வுக்காக அதிமுக ஆட்சியில் அடையாறு பேசின், கோவலம் பேசின் மற்றும் கொசஸ்தலை ஆறு பேசின் ஆகிய மூன்று பெரிய திட்டங்களை ஐந்தாண்டுகளுக்குள் முடிக்கக்கூடிய வகையில் விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டன. இதன்மூலம் சென்னையில் உள்ள சுமார் 2400 கி.மீ. நீளமுள்ள வடிநீர் கால்வாய்களை இணைக்கும் திட்டம், ஜெய்கா, ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டி பணிகள் தொடங்கப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பணிகள் முடிக்கப்பட வேண்டுமென்று திட்டமிடப்பட்டு, எங்களது ஆட்சிக் காலத்தில் சுமார் 1,240 கி.மீ. நீள வடிகால் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டங்களை முழுமையாகத் தொடர்ந்து செயல்படுத்தாததால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் தத்தளித்தன.
2021-ம் ஆண்டு மழையின்போது குறிப்பாக, சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் மழை நீர் வடிகால் பணிகள் 90 விழுக்காடு நிறைவடைந்தது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும்; 70 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சரும்; 75 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது என்று சென்னை மாநகர மேயரும்; 70 முதல் 80 விழுக்காடு நிறைவடைந்திருக்கிறது என்று தமிழக முதல்வரும் உண்மைக்கு மாறாக பேட்டி அளித்து, மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தை நடத்தினர்.
அதேபோல், 2022-ம் ஆண்டு நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் 1,200 கி.மீ தூரத்துக்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் சீரமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அவர்களின் கூற்றுப்படி 1,950 கிலோ மீட்டருக்கு பணிகள் முழுமையாக முடிந்திருந்தால் பருவமழை தொடங்கிய ஒருநாள் மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கி இருக்காது.
கடந்த 41 மாத கால ஸ்டாலினின் திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் முறையாகத் திட்டமிடாமல், கேபிள்கள் அமைப்பது, கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் என்று எங்கு திரும்பினாலும் சாலைகள் உடைக்கப்பட்டு, முச்சந்திகளிலும் பெரும் பள்ளம் (ஜங்ஷன் பாயிண்ட்) தோண்டப்பட்டு அவைகள் சரியாக மூடப்படாமல் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி பல விபத்துக்களும், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட சென்னை மயிலாப்பூரில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் விழுந்து மரணமடைந்ததை அனைவரும் அறிவார்கள். இத்தகைய நிர்வாகத் திறமையற்ற ஒரு அரசை தமிழக மக்கள் இதுவரை கண்டதில்லை.
இந்த ஆண்டு பருவ மழை தொடங்கிய முதல் நாளிலேயே, சென்னை தத்தளித்ததற்கு வெள்ள நீர் கால்வாய்கள் முழுமையாக தூர்வாராததே காரணம் என்று செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் 20 செ.மீ. வரை மழை பெய்தாலும், ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது என்று மாற்றி மாற்றி பேசிய ஸ்டாலினின் திமுக அரசின் அமைச்சர்கள், இன்று 4 மணி நேர மழைக்கே மக்கள் தத்தளிப்பதை ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.
இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மழை வெள்ளத்தைத் தடுக்க திட்டமிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத விளம்பர திமுக அரசினால் வீடுகளுக்குள் புகும் வெள்ள நீரால் டி.வி., ஃப்ரிட்ஜ், சோபா போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ, மினி வேன் வாகனங்களை ஆதாரமாகக் கொண்டு உழைக்கும் மக்கள், தங்கள் வாகனங்களை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். பெருமழையின்போது பொதுமக்கள் கண்டிப்பாக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். எனவே, இனியும் இந்த ஏமாற்று விளம்பர அரசை நம்பாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
நான் முன்பே குறிப்பிட்டதைப் போல் ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களையும், குடிதண்ணீர், பால், தேவையான மருந்துப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளவும், குறிப்பாக, குடிநீரை காய்ச்சிப் பருகவும் வேண்டும். தங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும் சூழ்நிலையில் மின்சார கேபிள்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இக்கட்டான தருணத்தில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இந்த கனமழையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை எப்போதும் போல் முன்னின்று செய்து, அவர்களின் துயர் துடைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலிறுத்துகிறேன்.
ஸ்டாலினின் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். எனவே, ஸ்டாலினின் திமுக அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT