Published : 15 Oct 2024 06:00 PM
Last Updated : 15 Oct 2024 06:00 PM
புதுச்சேரி: கனமழை எச்சரிக்கையால் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் கனமழை எச்சரிக்கையால் அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டிருந்தார். புதுவையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மழை பொழிவு அதிகமாக இல்லை. அதேசமயம், ஆளுநர் கைலாஷ்நாதன் அனைத்து பணிகளையும் ஆய்வு செய்தார். பள்ளி, கல்லூரிகள் விடுமுறையால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையில் தலா 30 பேர் கொண்ட 3 குழுக்கள் புதுவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதில் 2 குழு புதுவையிலும், ஒரு குழு காரைக்காலிலும் மீட்பு பணியில் ஈடுபடுகிறது. புதுவையில் 209, காரைக்காலில் 91, ஏனாமில் 17, மாகியில் 5 ஆக மொத்தம் 322 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
21 அவசர கால உதவி குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடும். பொதுமக்கள் அவசர கால உதவி பெற 112, 1070, 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை கனமழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நாளையும் விடுமுறை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT