Published : 15 Oct 2024 06:04 PM
Last Updated : 15 Oct 2024 06:04 PM

கனமழை தொடர்பாக பெறப்பட்ட 249 புகார்களில் 215-க்கு தீர்வு: தமிழக அரசு

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக முல்லை நகர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். | படம்: பி.ஜோதிராமலிங்கம்

சென்னை: கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், சென்னையில் 300 நிவாரண மையங்களும், மாநிலம் முழுவதும் 5147 மையங்களும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கடந்த அக்.1 முதல் அக்.14 வரை 10.52 செ.மீ. மழை பெய்துள்ளது. அதாவது வழக்கமான அளவைவிட 68 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சராசரியாக 2.241 செ.மீ., மழையும், சென்னையில் சராசரியாக 6.5 செ.மீ., மழையும், அதிகபட்ச மழைப்பொழிவுயாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையில் 13.4 செ.மீட்டரும், திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் 10 செ.மீட்டரும், சென்னை மாவட்டத்தில் மண்டலம் 8 மலர் காலனியில் 9 செ.மீட்டரும், மண்டலம் 6 கொளத்தூரில் 9 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிவாரண முகாம் துவக்கப்பட்டு அங்கு 32 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 96 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வானிலை மைய அறிவிப்பின்படி, நாளை (அக்.16) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், வேலூர். திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம். திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், அக்.17 அன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று அறிவித்துள்ளது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை (CAP) மூலம் 85 லட்சம் கைபேசிகளுக்கு முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 444 வீரர்களைக் கொண்ட 16 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையில் 10 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 89 மீட்புப் படகுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் 300 நிவாரண மையங்களும், மாநிலம் முழுவதும் 5147 மையங்களும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து கொள்ள மாநிலம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்களாக 37 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகளும், 6 மாவட்ட வருவாய் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

........

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x