Published : 15 Oct 2024 03:35 PM
Last Updated : 15 Oct 2024 03:35 PM
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த குடியிருப்புகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 209 திட்டப்பகுதிகளில் 1.20 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. குடியிருப்புதாரர்களின் வசதிக்காக வாரியத் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொலைபேசி வசதியுடன் (044 – 29862104) இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், திட்டப்பகுதிகளில் தேங்கும் மழைநீரினை வெளியேற்றுவதற்கு ஏதுவாக பம்ப்செட்டுகள், மண் நிரப்பும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மின்தூக்கி வசதிகள் உள்ள திட்டப்பகுதிகளில் போதுமான டீசல் (எரிப்பொருள்) கொள்முதல் செய்யப்பட்டு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. வாரியத்தால் ஏற்கெனவே எச்சரிக்கை செய்யப்பட்ட சிதிலமடைந்த குடியிருப்புகளில் உள்ள குடியிருப்புதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்துள்ள நிவாரண முகாம்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் - கண்ணகி நகர் திட்டப்பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள 10hp திறன் கொண்ட 10 மோட்டர்கள், 125 kv திறன் கொண்ட 2 ஜெனரேட்டர்கள் மற்றும் 3 மண் நிரப்பும் இயந்திரங்கள் (JCB) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைக்கு பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு வாரியம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்ககைளை மேற்கொண்டுள்ளது.
மேலும், பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரமும் வாரிய அலுவலர்கள் பணியில் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டடுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT