Published : 15 Oct 2024 12:15 PM
Last Updated : 15 Oct 2024 12:15 PM
சென்னை: “சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 மையங்கள் தயாராக இருக்கிறது.மொத்தமாக 931 மையங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால், அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்,” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “சென்னையில் 89 படகுகள், மற்றும் பிற மாவட்டங்களில் 130 படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 மையங்கள் தயாராக இருக்கிறது.மொத்தமாக 931 மையங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன.
சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வெள்ளத்தைக் கண்காணிக்க நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மருத்துவத் துறையும், மாநகராட்சியும் இணைந்து தமிழ்நாடு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால், அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். சென்னையில் மொத்தம் 8 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று நேற்றே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இன்றைய தினம் மீண்டும் அதை வலியுறுத்துகிறோம். காரணம், நாளையும், நாளை மறுதினமும் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பள்ளி விடுமுறை குறித்து தமிழக முதல்வர் முடிவெடுத்து இன்று மாலைக்குள் தெரிவிப்பார். மேலும் மழை நின்றால், கணேசபுரம், பெரம்பூர் சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படும்.” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT