Published : 15 Oct 2024 11:18 AM
Last Updated : 15 Oct 2024 11:18 AM

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை: நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகள் மற்றும் கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இருந்தபோதும் மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் ஆறுகள் மற்றும் ஓடைகள் வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோயில் ஆறு, ஶ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பேயனாறு, மீன்வெட்டிப்பாறை அருவி, வத்திராயிருப்பு குண்டாறு, சதுரகிரி தாணிப்பாறை ஓடை, அத்திக்கோயில் ஆறு, பாப்பநத்தான் கோயில் ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகள் மற்றும் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தேவதானம் சாஸ்தா கோயில் அணை, ராஜபாளையம் 6-வது மைல் நீர்த்தேக்கம், பிலவக்கல் பெரியாறு, கோவிலாறு அணை மற்றும் மலை அடிவார பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து அவற்றின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடங்கிய நிலையில் கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x