Published : 15 Oct 2024 04:09 AM
Last Updated : 15 Oct 2024 04:09 AM

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

சென்னை: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை (அக்.16) ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை, இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த 3 நாட்களில் விலகக்கூடும்.

16, 17-ம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்.15), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும். அடுத்த 2 நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இது மட்டுமல்லாது தமிழக பகுதிகளின் மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதை ஒட்டியமத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுமுதல் 17-ம் தேதி வரைதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (அக்.15) கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (அக்.16) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். அதனால் மேற்கூறிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

17-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல்மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

முதல்வர் ஆய்வு: இந்நிலையில், சென்னை மற்றும்அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதன்படி, அக்.15 முதல் 18 வரை தனியார் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். தேசிய பேரிடர் மீட்புப்படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும். வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்புப்படகுகளை நிலை நிறுத்த வேண்டும். பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில், பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். ஆவின் நிறுவனம் மூலம்பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி விநியோகிக்க வேண்டும். பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். மின்சாரம் தடைபடாமல் இருப்பதையும், மின் விநியோகம் சீராக இருப்பதையும் கூடுதல் பணியாளர்கள் மூலம் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டத்தில், துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், டிஜிபிசங்கர்ஜிவால், வருவாய் நிர்வாகஆணையர் ராஜேஷ் லக்கானி, சுகாதாரம், வருவாய், பொதுப்பணி, நீர்வளத்துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தீயணைப்புத்துறை இயக்குநர் அபாஷ் குமார், சென்னைகாவல் ஆணையர் ஆ.அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, தலைமைச்செயலர் நா.முருகானந்தம் தலைமையில், இந்திய வானிலை ஆய்வு மையதென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விடுமுறை அறிவிப்பு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x