Published : 28 Jun 2018 11:35 AM
Last Updated : 28 Jun 2018 11:35 AM
மதுரையில் சாலையில் இருந்து பள்ளமான முன்னாள் எம்எல்ஏ-வின் 26 ஆண்டு பழமையான வீட்டை ஹரியானா கட்டுமானத் தொழில்நுட்ப குழுவினர் இடிக்காமல் ஜாக்கிகளை கொண்டு 6 அடி உயரத்திற்கு தூக்கி நிறுத்தியுள்ளனர். இந்த விசித்திர முயற்சியை பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்து வியந்து செல்கின்றனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ஆண்டித்தேவர். இவர் திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ. இவருக்கு மதுரை எஸ்.எஸ்.காலனியில் 2,600 சதுர அடியில் மேல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. இந்த வீடு கட்டத் தொடங்கியபிறகுதான் ஆண்டித்தேவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிப்பெற்றார். பார்வர்டு பிளாக் கட்சியில் மாநில பொறுப்பு கிடைத்தது.
அவரது வாரிசுகளுக்கு திருமணம் நடைபெற்றது, பேரக்குழந்தைகள் பிறந்தது இந்த வீட்டில்தான். அதனால், அரசியல், குடும்ப ரீதியாக இந்த வீட்டை அவரது குடும்பத்தினர் செண்டிமெண்ட்டாக கருதி வந்தனர். தற்போது ஆண்டித்தேவர் உயிருடன் இல்லை. அவரும், அவரது குடும்பத்தினரும் அந்த வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.
தற்போது இந்த வீடு சாலையை விட்டு 2 அடிக்கு கீழ் பள்ளமானது. மழை பெய்தால் மழைநீர் வீட்டிற்கு புகுந்தது. ஆனால், ராசியான இந்த வீட்டை இடித்துவிட்டு புது வீடு கட்ட ஆண்டித்தேவர் குடும்பத்தினருக்கு மனமில்லை. அதேநேரத்தில்
சாலையை விட பள்ளமான வீட்டில் வசிப்பதால் வாஸ்து ரீதியாக சரியில்லை என்றும் கவலைப்பட்டனர். வீட்டின் கட்டுமானம் தற்போதைய கான்கீரிட் கட்டடத்திற்கு இணையான உறுதித்தன்மையுடன் இருந்தது. அதனால், வீட்டை இடிக்காமலே ஜாக்கிகளை கொண்டு தூக்கி நிறுத்த முடிவு செய்தனர்.
அதற்கான பொறுப்பு ஹரியானாவை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இருந்து இந்த தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த 20 கட்டுமான தொழிலாளர்களை வரவழைத்தனர். அவர்கள், வீட்டை சுற்றிலும் 200 ஜாக்கி வைத்து வீட்டை 6 அடி உயர்த்தியுள்ளனர். இன்னும் 1 அடி வரை உயர்த்த உள்ளனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களிலும், மேற்கூரை கான்கிரீட் தளத்திலும் சிறு விரிசல் கூட விழவில்லை.
வீட்டை இடிக்காமல் அப்படியே ஜாக்கிகளை கொண்டு வடமாநில தொழிலாளர்கள் படிப்படியாக உயர்த்துவதை பொதுமக்கள் தினமும் நின்று வேடிக்கைப்பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து ஆண்டித்தேவர் மகன் பன்னீர் செல்வம் கூறுகையில், “வீட்டின் கீழ் தளத்தில் 3 படுக்கை அறைகள், ஒரு ஹால், வராண்டா, சமையல் அறை மற்றும் ஒரு அலுவலக அறை உள்ளது. மேல் தளத்திலும் அதே அளவில் அறைகள் உள்ளன. 1992-ல் வீடு கட்டியபோது எஸ்.எஸ்.காலனியில் எங்க வீடுதான் சாலையை விட மிக உயரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருந்தது. எங்கள் வீட்டின் வராண்டாவில் நின்றுப்பார்த்தால் சாலையில் யார் செல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். தற்போது சாலையை விட 2 அடிப்பள்ளத்திற்கு வீடு சென்றுவிட்டது.
அப்பா எங்களுக்காக பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. பல அரசியல் தலைவர்கள் வந்து சென்றுள்ளனர். அப்பாவின் நினைவாக உள்ள இந்த வீட்டை இடித்து புதிதாக கட்ட மனமில்லை. அதனால், தரைத்தளத்தை மட்டும் பெயர்த்து உயர்த்த முடிவு செய்து வீட்டைக் கட்டிக் கொடுத்த பொறியாளரை சென்றுப்பார்த்தோம். அவர் வீட்டை வந்துப்பார்த்து இன்னும் 50 ஆண்டுக்கு வீட்டின் கட்டுமானத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை’’ என்றார்.
அதனால், வீட்டை ஜாக்கிகளை கொண்டு தூக்கி நிறுத்தலாம் என்ற யோசனையை தெரிவித்தார். அவரது ஏற்பாட்டிலே தற்போது வீட்டை 7 அடி உயரம் வரை உயர்த்தி வருகிறோம். வீட்டின் அடித்தளத்தில் உள்ள சுவர்களை மட்டுமே ஜாக்கிகளை கொண்டு தூக்கினர். உள் பகுதியில் உள்ள தரைத்தளத்தை உடைத்து எடுத்துவிட்டனர். தற்போது வெளியே இருந்து பார்க்கும்போது வீடு அப்படியே இருப்பது போல் இருக்கும். உள் பகுதி எலும்பு கூடு போல் வெற்றிடமாக காணப்படும். வீட்டை 7 அடிக்கு உயர்த்திய பிறகு உள் பகுதியில் மண்ணை கொண்டு நிரப்பி தரைத்தளம் புதிதாக போட உள்ளோம்” என்றார்.
கட்டடப்பொறியாளர் அன்பில் தர்மலிங்கம் கூறுகையில், “இந்த வீட்டை தூக்கியதற்கு சதுர அடிக்கு 200 ரூபாய் வாங்குகின்றனர். ஆனால், அடுக்குமாடி குடியிருப்பு, கட்டடம் அமைவிடம் உள்ளிட்டவற்றைப் பொறுத்து இந்த கட்டணம் மாறுபடுகிறது. எத்தகைய நெரிசலான பகுதியிலும், தொடர்ச்சியாக வீடுகள் இருந்தாலும் இந்த தொழில் நுட்பத்தில் எந்த வீட்டையும் மற்ற கட்டடங்களுக்கு தொந்தரவும் இல்லாமல் தனியாக உயர்த்தி தூக்கி நிறுத்தலாம். ஒரு ஜாக்கியால் 100 டன் எடையை தாங்கிப்பிடித்து உயர்த்த முடியும். வீட்டின் மொத்த எடை 280 டன் என கருதுகிறோம்” என்றார்.
இடிந்து விழுந்தால் நஷ்ட ஈடு
கட்டடத்தை உயர்த்துவதற்குமுன் இந்த தொழில்நுட்ப குழுவினர் முதலில் கட்டடத்தை வந்து பார்வையிடுகின்றனர். அதன் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்கின்றனர். அதன்பின்னரே கட்டடத்தின் அஸ்திவாரத்தில் 3 அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதில் ஜாக்கிகளை பொருத்துகின்றனர்.பழைய அஸ்திவாரத்தை படிப்படியாக அகற்றி ஒரே நேரத்தில் வீட்டை சுற்றிலும் உள்ள ஜாக்கிகளை இயக்குகின்றனர். நாள் முழுவதும் ஜாக்கிகளை கொண்டு தூக்கினாலும் சென்டி மீட்டர் அளவுக்கு தான் வீடு மேலே உயருகிறது.
இந்த தொழில்நுட்பத்தில் வீட்டை உயர்த்தும்போது கட்டிம் இடிந்துவிழுந்தால் என்னாகும் என அச்சப்பட தேவையில்லை. கட்டடத்தை ஜாக்கிகளை கொண்டு உயர்த்தும்போதோ, உயர்த்தி வைத்தப்பிறகு 15 ஆண்டுகள் வரை இடிந்து விழுந்தாலோ, விரிசல் விட்டாலோ அதற்கான நஷ்ட ஈடு கொடுத்துவிடுவதாக வீட்டு உரிமையாளருடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறது. அதன்பிறகே கட்டடத்தை தூக்கி நிறுத்தும் பணியை தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT