Published : 15 Oct 2024 06:15 AM
Last Updated : 15 Oct 2024 06:15 AM

சம்பிரதாயத்துக்காக மட்டுமே ஆறுகள், கால்வாய்களில் கதவுகள் அமைக்கப்பட்டதா? - முன்னெச்சரிக்கையாக இயக்கி கூட பார்க்கவில்லை என மக்கள் புகார்

புளியந்தோப்பு, ஓட்டேரி நல்லா கால்வாயில் அமைக்கப்பட்ட கதவு மீது பயனற்ற டிஜிட்டல் பேனர், துணிகள், டயர்கள் போட்டு வ க்கப்பட்டுள்ளன . (அடுத்த படம்) வியாசர்பாடி, கேப்டன் காட்டன் கால்வாயில் அமைக்கப்பட்ட கதவை சுற்றி தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகள்.

சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், இன்றும் நாளையும் சென்னையில் அதிகனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் பருவமழையை எதிர்கொள்ள 169 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்காலிகமாக 200 வார்டுகளுக்கும் தலா 5 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 44 ஆயிரத்து 825 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. மண்டல அளவில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும்நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆகும் அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம்ரூ.1 கோடியே 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரண பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் நம்பிக்கையுடன் இருக்கிறது.

மழை காலங்களில் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் அதிக அளவில் மழைநீர் செல்லும்போது, அவை செல்லும் வழிகளில் இணைக்கப்பட்ட மழைநீர் வடிகால்கள் வழியாக வெள்ள நீர் சென்று நீண்ட காலமாக பாதிப்பை ஏற்படுத்தி வந்தன.

2021-ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட பெருமழையை தொடர்ந்து வல்லுநர்கள் வழங்கிய ஆலோசனைப்படி, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் மாநகரப் பகுதியில் பாயும் 30-க்கும்மேற்பட்ட கால்வாய்களுடன், மழைநீர் வடிகால்கள் இணையும் 100-க்கும்மேற்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கதவுகள் அமைக்கப்பட்டன. அவை அன்று முதல்இன்று வரைஇயக்கப்படவே இல்லைஎன்று பொதுக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக புளியந்தோப்பு மற்றும் வியாசர்பாடி பகுதிகளை சேர்ந்தபொதுமக்கள் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் இந்த கதவுகள் சம்பிரதாயத்துக்காகவே அமைக்கப்பட்டதாக தெரிகிறது. நிறுவப்பட்ட நாள் முதல் அதை இயக்குவதே இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட அதை இயக்கிபார்க்கவில்லை.

கடந்த ஆண்டும், இந்த ஆண்டு 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் கூட இதை கண்டறிந்து, முன்னெச்சரிக்கையாக இயக்கிபார்க்கவில்லை. மேயர் மற்றும் கவுன்சிலர்களும் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் அந்த கதவுகள் துருப்பிடித்து பயனற்று கிடக்கின்றன.

பயனற்ற டிஜிட்டல் பேனர்: புளியந்தோப்பு, ஓட்டேரி நல்லா கால்வாயில் அமைக்கப்பட்ட கதவு மீது, அப்பகுதியை சேர்ந்தவர்கள், பயனற்ற டிஜிட்டல் பேனர், துணி, டயர்கள் போன்றவற்றை போட்டு வைத்துள்ளனர். வியாசர்பாடி கேப்டன் காட்டன் கால்வாயில் அமைக்கப்பட்ட கதவை சுற்றி குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.

பருவமழைக்காக இவை தயார்படுத்தப்படவே இல்லை. இதனால், இந்த கதவை அமைத்ததன் நோக்கமே பாழாகியுள்ளது. மாநகராட்சியின் பருவமழை தயார் நிலையில், இதெல்லாம் வராதது வேதனைஅளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கதவுகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x