Published : 14 Oct 2024 11:57 PM
Last Updated : 14 Oct 2024 11:57 PM
கோவை: கோவையில் தொடரும் மழையால், மாவட்டத்தில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கோவை மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில், மாநகராட்சிப் பகுதியில் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம், குறிச்சிக்குளம், சிங்காநல்லூர் குளம், செல்வசிந்தாமணி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன. மீதமுள்ள குளங்கள் புறநகரப் பகுதியில் உள்ளன. நொய்யல் ஆற்றின் வழியோரம் உள்ள உக்குளம், பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குட்டை, கங்க நாராயண சமுத்திரம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மாநகரில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உபரி நீர் கால்வாய்களில் வழிந்தோடி வருகிறது.
வாலாங்குளத்தில் உபரி நீர் அருகில் உள்ள சாலையில் வழிந்தோடியது. அப்போது குளத்தில் இருந்த மீன்களும் சாலைகளில் வழிந்தோடியது. பொதுமக்கள் அதைப் பிடித்தனர். மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. 15-க்கும் மேற்பட்ட குளங்கள் வேகமாக நிரம்பி வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சின்னத்தடாகம் பகுதியில் நேற்று பெய்த கனமழையால், அப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பின. இதனால் வெளியேறிய வெள்ள நீர் கணுவாய் தடுப்பணையை நிரப்பி, ராஜவாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டி ஏரிக்குச் சென்றது.
அணைகளில் நீர்மட்டம் உயர்வு: கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ள சிறுவாணி அணையிலிருந்து தினமும் குடிநீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சிக்கும், வழியோர கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணை மற்றும் அடிவார நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகா மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சிறுவாணி அணையில் 42.31 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. மேலும், பில்லூர் அணையில் கடந்த 2 நாட்களில் 87 அடியில் இருந்து நீர்மட்டம் 91.50 அடியாக அதிகரித்தது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் கூறும்போது, ‘‘கோவை மாநகரில் மழை தேங்கும் வழக்கமான இடங்கள் கண்டறியப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.
கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள்: மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகரில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 0422-2302323 என்ற தொலைபேசி எண்ணிலோ, 81900 00200 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், மண்டலம் வாரியாக பார்க்கும் பொழுது வடக்கு மண்டலம் 89259 75980, மேற்கு மண்டலம் 89259 75981, மத்திய மண்டலம் 89259 75982, தெற்கு மண்டலம் 90430 66114, கிழக்கு மண்டலம் 89258 40945 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT