Published : 14 Oct 2024 10:01 PM
Last Updated : 14 Oct 2024 10:01 PM
சென்னை: கடந்த 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை மொத்தமாக திறந்துவிட்டு 289 பேர் பலியாக காரணமானவர்கள், தற்போது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் முதல்வர் என்று எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் அதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கடந்த 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற செய்தி வெளியானது. அதை படிக்காமல் அறிக்கை விட்டுள்ளார். அப்போது முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.
அந்த மாவட்டங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள், மீட்புப் பணிகள் செய்வது தொடர்பாக ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதே போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த 2015 பெரு வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்து அதனை மொத்தமாகத் திறந்துவிட்டு சென்னையை மூழ்கடித்து 289 பேர் பலியாக காரணமானவர்கள் எல்லாம் இன்றைக்குச் சாத்தான் வேதம் ஓதுவது போலப் பேசுகிறார்கள்.
அப்படியான எந்த நிகழ்வும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக முதல்வர் ஆய்வுக் கூட்டம் போட்டால், ’எதற்காக ஆலோசனைக் கூட்டம்’ எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவரை பார்த்து தமிழக மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள். 6 நாட்களுக்கு முன்பு கூட மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். பொறுப்பு அமைச்சர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிர்வாகத்தோடு சேர்ந்துதான் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்கள். பேரிடர் காலத்திலும் தனக்கு விளம்பரம் கிடைக்காதா? எனக் காத்திருக்கிறார் பழனிசாமி.
‘துணை முதல்வர்’ பதவியை இன்றைக்குப் பரிகாசம் செய்யும் பழனிசாமி , தன்னை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி மிரட்டிய போது அவருக்குத் தராமல், தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளப் பன்னீர்செல்வத்திற்குத் துணை முதல்வர் பதவியைக் கொடுத்தது எதற்காக?. ‘சென்னை மாநகராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஏன் பங்கேற்கவில்லை’ என பழனிசாமி கேட்டுள்ளார். கடந்த 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த தமிழகம் முழுமைக்கான மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்” என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT