Published : 14 Oct 2024 05:34 PM
Last Updated : 14 Oct 2024 05:34 PM

மதுரையில் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் 4,000 ஊழியர்கள்: இரவுப் பணிக்கு 20 மீட்புக் குழுக்கள் நியமனம்

மதுரையில் ஞாயிறு இரவு பெய்த கனமழையின் காரணமாக சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீர் | படங்கள்:  எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரை மாநகரில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் இரவுப் பணிக்கு மண்டலம் வாரியாக 20 மாநகராட்சி மழை மீட்புக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மழை பெய்யும்போது பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதற்கு நிபுணத்துவம் பெற்ற 60 பாதாளசாக்கடை ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாகநகராட்சிப் பகுதியில் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பழைய மாநகராட்சியின் 72 வார்டுகளில் உள்ள சாலைகள், பாதாளச் சாக்கடை, மழைநீர் கால்வாய்களில் ஏற்கெனவே, போதுமான மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை. தற்போது இந்த கட்டமைப்பை போர்கால அடிப்படையில் மறுசீரமைப்பு செய்து, பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனாலும், புறநகர் கண்மாய்கள், சாத்தையாறு அணை, மாநகர கண்மாய்கள் போன்றவை நிரம்பும்போதும், நீர் வரத்து வாய்க்கால்கள் உடையும் போதும் மாநகராட்சியால் மாநகர் பகுதியில் மழைநீர் தேங்குவதையும், அதன் பாதிப்பையும் உடனடியாக சரி செய்ய முடிவதில்லை. சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்து இரவு நேரங்களில் பொதுமக்களிடம் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியவில்லை. தனியார், அரசு அலுவலகங்களுக்கும் ஊழியர்கள் செல்ல முடியவில்லை. கடை வீதிகள், மார்க்கெட் பகுதிகளில் தண்ணீர் தேங்கி வியாபாரம் பாதிக்கப்படுகிறது. ஒருநாள் மழையை தாங்கும் அளவுக்குக்கூட மதுரை மாநகரில் மழைநீர் வடிகால் வசதி கட்டமைப்புகள் இல்லாததால், மழை பாதிப்பை ஆண்டுதோறும் தவிர்க்க முடியவில்லை. வழக்கம்போல் தற்போது வடகிழக்கு தொடங்கிய முதல் நாளே மதுரை மாநகரம் மழை பாதிப்பால் ஸ்தம்பித்தது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியது: “பருவமழை எதிர்கொள்ள 4,000 மாநகராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழைநீர் வடியும் வகையில் ரூ.1 கோடி அளவில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்துள்ளோம். மழை பெய்யும்போது பாதாளச் சாக்கடை பொங்கி மழைநீருடன் கலந்து வெளியேறி சுகாதாரச் சீர்கேட்டையும், நோய் பாதிப்பையும் ஏற்படுத்தும். இதனை தடுக்க, பாதாளச்சாக்கடை அடைப்பை சரி செய்வதற்கான நிபுணத்துவம் பெற்ற 60 பணியாளர்களை புதிதாக பணி நியமனம் செய்துள்ளோம்.

தண்ணீரை வெளியேற்ற ஜெனரேட்டர்கள், டிராக்டர்கள், ஜேசிபி, டிப்பர் வாகனங்களை போதுமான அளவு வாடகைக்கு வாங்கி வைத்துள்ளோம். மழை பெய்யும்போது மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தும். மரம் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்ற ஒவ்வொரு மண்டலத்துக்கும் 4 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் மழைநீர் தேங்கும் வொர்க் ஷாப் ரோடு கர்டர் பாலம், செல்லூர் தத்தனேரி, திருப்பரங்குன்றம் போன்ற சப்வே பகுதியில் மழைநீர் தேங்கினால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது.

மதுரை மாநகரில் பருவமழை முடியும் வரை அதனை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மண்டலத்திலும் 2 உதவி செயற்பொறியாளர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் அடங்கிய 4 மழை மீட்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இரவு முழுவதும் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

மீட்பு பணிக்கு ‘புல்லட்’டில் சென்ற ஆணையர்: மதுரை மாநகரில் நேற்று இரவு 11 மணியளவில் கன மழை பெய்தபோது மதுரை செல்லூர் 50 அடி சாலை, கோரிப்பாளையம் உட்பட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வாகனத்தில் யாரும் செல்ல முடியவில்லை. தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், ‘புல்லட்’டில் இரவு 12 மணி வரை உதவியாளருடன் மழை நீர் தேங்கிய பகுதிகளுக்குச் சென்று தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்களை விரைவுபடுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x