Published : 14 Oct 2024 04:37 PM
Last Updated : 14 Oct 2024 04:37 PM
மதுரை: பருவமழைக் காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களை பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வழிகாட்டியுள்ளது.
அதிக, காற்று, பருவமழை காலங்களில் தோட்டக்கலை பயிர்களை வளர்த்து சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். அவற்றை வளர்த்து, அறுவடை செய்து சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வரை விவசாயிகள் பிரசவ வலிக்கு நிகரான வேதனையை அனுபவிக்கிறார்கள். உதாரணமாக, தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள், வாழை, மா, பப்பாளி போன்ற பல்வேறு பழமரங்கள் போன்றவை மழை, சூறைக் காற்றால் அழிந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள், இந்த மழைகாலத்தை எதிர்கொண்டு தோட்டக்கலை பயிர்களை பராமரிப்பை மேற்கொள்வது சம்பந்தமாக மதுரை தோட்டக்கலைத்துறை அதி்காரிகள் அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறியது: ''வாழைத் தோட்டங்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.
இதர பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா போன்ற பயிர்களை பொறுத்தவரை காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தூர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும்.
கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட வேண்டும். நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். காய்கறி பயிர்களை பொறுத்தவரை, வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.
நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுக்கொடுத்து புதிதாக நடவு செய்த செடிகள் சாயாவண்ணம் பாதுகாக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
பசுமைக்குடிலை பொறுத்தவரை, அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
பசுமைக்குடிலின் கட்டுமானத்தில் உள்ள கிளிப்புகள் ஏதேனும் விலகி இருப்பின் சரி செய்ய வேண்டும். நிழல்வலைக்குடிலை பொறுத்தவரை கிழிசல் ஏதேனும் இருப்பின் உடன் தைத்து சரி செய்ய வேண்டும். நிழல்வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT