Last Updated : 14 Oct, 2024 04:05 PM

 

Published : 14 Oct 2024 04:05 PM
Last Updated : 14 Oct 2024 04:05 PM

காரைக்கால் கோயில் நில மோசடி: நேர்மையான விசாரணைக்கு ஆளுநர் உத்தரவு

ஆளுநர் கைலாஷ்நாதன்

புதுச்சேரி: காரைக்காலில் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த நில மோசடி விவகார விசாரணையில் எவ்வித தவறும் நடக்காமல் நேரமையான விசாரணை நடத்த ஆட்சியருக்கு ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தியுள்ளார்.

காரைக்கால், கோவில் பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், மாவட்ட முதன்மை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் ஆகியோரின் நேரடி பார்வையில் முதல் நிலை விசாரணை நடைபெற்றது. அதன் அடிப்படையில், மோசடியில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக மாவட்டத் துணை ஆட்சியர் (வருவாய்) ஜான்சன், துணை சர்வேயர் ரேணுகா தேவி மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நில மோசடி விவகாரம் புதுச்சேரி மாநிலத்திற்கும் அரசு நிர்வாகத்திற்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் இந்த வழக்கு விசாரணையையும் அதன் விவரங்களையும் துணைநிலை ஆளுநர் கூர்ந்து கவனித்து வருகிறார். விசாரணையில் எவ்வித தவறும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் ஆட்சியருக்கும், அதிகாரிகளுக்கும் இன்று வழங்கியுள்ள ஆலோசனை விவரம்: "காரைக்கால் கோவில்பத்து ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி விவகாரம் மட்டுமல்லாமல் இது போன்ற எத்தகைய கோயில் நில மோசடிகளையும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதன் அடிப்படையில், கோயில் நில மோசடிகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு மோசடியில் ஈடுபட்டு நபர்களை அடையாளம் காண வேண்டும். அத்தகைய கோயில் நிலங்கள் உடனடியாக மீட்டு மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், கோயில் சொத்துக்கள் சம்பந்தமாக முறையாக கணக்கெடுத்து அவற்றை முறையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற விவகாரங்கள் இனியும் நடக்காமல் இருப்பதற்கு வருவாய்த் துறை, நில அளவைத் துறை மற்றும் பத்திர பதிவுத்துறை, அறநிலையத் துறை போன்றவை கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற நில மோசடிகளை அடையாளம் கண்டு வெளிக்கொண்டு வரவும் மக்களிடையே இவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x