Published : 14 Oct 2024 03:14 PM
Last Updated : 14 Oct 2024 03:14 PM

மழை பாதிப்பு: ஏழை, எளியோருக்கு உதவிட அமமுகவினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: “ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களே அரசு நிர்வாகத்தின் தோல்வியையும், திறமையின்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதுகாப்போடு இருப்பதோடு, அவரவர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற அடிப்படை உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட போதுமான உதவிகளை செய்திட வேண்டும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்தளப் பதிவில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுதினம் தொடங்கும் என அறிவித்திருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை, கோவை, மதுரை, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை ஒப்பிடும் போது நடப்பாண்டு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்திருக்கும் நிலையில், அமமுகவின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளும், அவரவர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களே அரசு நிர்வாகத்தின் தோல்வியையும், திறமையின்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே அமமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதுகாப்போடு இருப்பதோடு, அவரவர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற அடிப்படை உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட போதுமான உதவிகளை செய்திட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x