Last Updated : 14 Oct, 2024 02:32 PM

2  

Published : 14 Oct 2024 02:32 PM
Last Updated : 14 Oct 2024 02:32 PM

“தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வற்புறுத்தி நிதியைத் தராமல் இருப்பது ஏற்புடையதல்ல” - அமைச்சர் அன்பில் மகேஸ்

அமைச்சர் அன்பில் மகேஸ்

கோவை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் எனக் கூறி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 வகுப்புப் பொது தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘தமிழக அரசு கல்வித் துறைக்காக ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேராததால் மத்திய அரசு உடனடியாக நிதி வழங்காவிட்டாலும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்து ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்.

மழைக்காலத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம். தமிழக அரசுக்கு மத்திய அரசின் நிதி முதல் தவணையாக ரூ.573 கோடி ரூபாய் வராமல் உள்ளது. இதனால் 32,292 பேருக்கு சம்பளம் வராமல் இருக்கிறது. மத்திய அரசு நிதி தராமல் இருப்பதால் தமிழக அரசே நிதியைப் பார்த்துக் கொள்கிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார். மத்திய அரசு பல்வேறு காரணங்களை கூறி மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடர்ந்து டெல்லி சென்று துறை செயலரை வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

மலைப் பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் எஸ்கார்ட் என்ற திட்ட மூலம் 32 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். சிறப்புக் குழந்தைகளுக்கான செயல்பாடுகள், பள்ளிகளில் கலை பண்பாட்டு துறை கொண்டாட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுத்தி வரும் நிலையில் திடீரென அந்த நிதியில் எவ்வித காரணமும் இல்லாமல் கை வைக்கிறார்கள்.

மாணவர் சேர்க்கை சதவீதம் 62 சதவீதத்தை தாண்டிச் செல்லும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மத்திய அரசு சொல்லும் 20 வகையான கூறுகளில் 18-ல் தமிழக அரசு முதலில் உள்ளது. இதை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக கொண்டு செல்ல போகிறோம் என்று சொல்வது தான் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதை விடுத்து, எங்கள் கொள்கைகளை சேர்த்துக்கொண்டால் மட்டுமே நிதி தர முடியும் என்பது எந்த விதத்தில் நியாயம்? கல்வித் துறை என்பது அடுத்த தலைமுறையை உருவாக்கும் துறை என்பதால் மாநில அரசு எந்த விதத்திலும் அந்தத் துறையை கைவிடாது.

சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் குறித்து லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அதில் சில கட்டிடங்களை இடிக்க வேண்டியுள்ளது. மாவட்ட வாரியாக சிதலமடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்த விவரங்கள் எடுக்கப்பட்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து 18,000-க்கும் மேற்பட்ட இடங்களில் வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், ஆய்வுகங்கள் என கட்ட தீர்மானித்து இதுவரை 3,500 வகுப்பறைகள் ஆய்வகங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

கல்வித் துறையில் முன்னணி மாநிலமாக இருக்கும்பொழுது மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அழுத்தங்களை தருகிறார்களே தவிர, இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்க மறுக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x