Published : 14 Oct 2024 01:35 PM
Last Updated : 14 Oct 2024 01:35 PM

மழைக்கால மின்தடையால் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை தேவை: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: “குறைந்த பணியாளர்களைக் கொண்டு இந்த வடகிழக்கு பருவ மழையை சரி செய்து சமாளித்து விடலாம் என அரசு எண்ணாமல், கேங்மேன்களாக பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவித்து, ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற ஐந்தாயிரம் கேங்மேன்களையும் பணியில் அமர்த்தி, ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியக்கூடிய தொழிலாளர்களை வயர் மேன்களாகவும், கள உதவியாளராகவும் நியமனம் செய்து, உடனடியாக பொதுமக்கள் மின்தடையால் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமையாகும்,” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், தொழிற்சாலையின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் மின்வாரியத்தில் 24 ஆயிரம் கள உதவியாளர்களும், 10 ஆயிரம் வயர் மேன்களுக்கான பணியிடங்களும் காலியாக உள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கும் இந்த நேரத்தில் மின்சார பிரச்சினைகள் உருவாகும். தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு வயர் மேன், கள உதவியாளர், கேங்மேன் ஆகிய மூவர்களின் மீது கூடுதல் பணி சுமை விழுகிறது.

வயர் மேன் ஒருவர் நான்கு பகுதிகளை சரி செய்யக்கூடிய அளவுக்கு பணி சுமை கொடுக்கப்படுகிறது. மழைக்காலத்தில் ஓர் பகுதியில் மின் தடையை சரி செய்து கொண்டிருக்கும் பொழுதே, மற்றொரு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நேரங்களில் இதை சரி செய்து விட்டுத் தான் அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் மரங்கள் சாய்வதனால் மின் வயர்கள் ஆங்காங்கே துண்டிக்கப்படுகிறது. அதையும் சரி செய்வதற்கு இவர்கள் தான் செல்ல வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

குறைந்த பணியாளர்களைக் கொண்டு இந்த வடகிழக்கு பருவ மழையை சரி செய்து சமாளித்து விடலாம் என அரசு எண்ணாமல், கேங்மேன்களாக பணி புரியக்கூடிய தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவித்து, ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற ஐந்தாயிரம் கேங்மேன்களையும் பணியில் அமர்த்தி, ஒப்பந்த பணியாளர்களாக பணி புரியக்கூடிய தொழிலாளர்களை வயர் மேன் களாகவும், கள உதவியாளராகவும் நியமனம் செய்து, உடனடியாக பொதுமக்கள் மின்தடையால் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு நல்ல அரசின் கடமையாகும்.

மேலும் மழை நேரங்களில் மின் ஊழியர்களின் உயிர் இழப்புகளை தடுப்பதற்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஒரு செட் பிரிவு அலுவலகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது மின்தடை ஏற்பட்டுள்ள பகுதியில் மின்கசிவு உள்ளதா என பார்ப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்த இயலும், மற்ற மின் ஊழியர்கள் நேரடியாக சென்று மின் பாதையை சரி செய்யும் போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே உயிரிழப்பை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு பிரிவு அலுவலகத்துக்கும் குறைந்தது மூன்று செட் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். மேலும் பருவ மழைக்காலத்தை மின்வாரியம் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாத வண்ணம் சுமூகமாக பார்த்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x