Published : 14 Oct 2024 01:11 PM
Last Updated : 14 Oct 2024 01:11 PM

வடகிழக்கு பருவமழை | தமிழகத்தில் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது - ஆவின் விளக்கம்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக, கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது, என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 50,000 எண்ணிக்கையில், அரை லிட்டர் பால் (UHT) 90 நாட்கள் வரை கெடாமல் இருப்பு வைக்கக்கூடிய பால் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஆவடி, அண்ணாசாலை, தியாகராயநகர், பூந்தமல்லி, மாதவரம், விருகம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில், தலா 1000 கிலோ வீதம், 9000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை தீவனம் சுமார் 500 டன் மற்றும் தாது உப்பு கலவை சுமார் 50 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி நகர்வதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தது. சென்னைக்கு இன்று (அக்.14) கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை (அக்.15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மறுநாள் (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x