Published : 14 Jun 2018 04:47 PM
Last Updated : 14 Jun 2018 04:47 PM
உதகையிலிருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை சுமார் 11.30 மணிக்கு அரசு பேருந்து குன்னூர் நோக்கி சென்றது. இந்த பேருந்த ஓட்டுநர் ராஜ்குமார் (42) என்பவர் ஒட்டிச் சென்றார். பேருந்து மந்தாடா பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென சாலையோரத்திலிருந்து 50 அடி பள்ளத்தில் உருண்டது. இதில், பயணித்தவர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கேத்தி போலீஸார், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். கேத்தி ஆய்வாளர் விநாயகம், உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்புத் துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை முதல் கன மழை பெய்ததாலும், பேருந்து விவசாய தோட்டத்தில் கவிழ்ந்ததால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கடும் வழுக்கலான பாதையில் பயணிகளை மீட்பதில் கடும் சிக்கல் நேரிட்டது. விபத்தில் சம்பவயிடத்திலேயே ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்டவர்கள் உதகை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து காரணமாக உதகை-குன்னூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் உதகையிலிருந்து சென்ற வாகனங்கள் கோத்தகிரி மார்க்கமாக திருப்பி விடப்பட்டன.
சம்பவ இடத்தக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப் பிரியா சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணிகளை ஆய்வு செய்தனர்.
விபத்தில் பேலிதளாவை சேர்ந்த தர்மன் (64), குன்னூரை சேர்ந்த தினேஷ், உதகை நொண்டிமேட்டை சேர்ந்த நந்தகுமார், பிரபாகரன், உதகை கார்டன் சாலையை சேர்ந்த சாந்தகுமாரி (55) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த மற்றொரு பெண்ணின் அடையாளம் தெரியவில்லை.
இந்நிலையில், சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்படும் வழியில் ஆல்மாஸ் என்பவர் உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த 34 பேரில் 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் வெங்கடேஷ், பாலசுந்தரம், கிருஷ்ணகுமார், நிவேதா, மணி, மவுலீஸ்வரன் மற்றும் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த ஆல்தொரை, ஆனந்தன், சீனிவாசன், ஜோதிலட்சுமி, சுமதி, யசோதா, ஜெயராமன், சுகன்யா, பானுமதி உட்பட 22 பேர் உயர் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை எம்.பி.அர்ஜூனன் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவ உதவி கிடைக்க தாமதமானதாக விபத்தை நேரில் பார்த்த குன்னூரை சேர்ந்த டோமினிக் தெரிவித்தார்.
அவர் கூறும் போது, “விபத்து காலை 11.30 மணிக்கு ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் தொலைபேசியில் 108 ஆம்புலேன்சுக்கு தகவல் அளித்தோம். ஆனால், ஆம்புலன்ஸ்கள் வரவில்லை. இதனால், ஒரு மணி நேரமாக மருத்துவ உதவி கிடைக்காமல் பயணிகள் அவதியடைந்தனர். போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அவர்களுடன் இணைந்து பயணிகளை மீட்டனர்” என்றார்.
பேருந்து சாலையிலிருந்து விலகி சென்றதால் விபத்து ஏற்பட்டது என ஓட்டநர் ராஜ்குமார் தெரிவித்தார். அவர் கூறும்போது, “மந்தாடா பகுதியில் பேருந்து சென்றுக்கொண்டிருந்த போது, சாலையில் குழியை தவிர்க்க பிரேக் போட்டதில், மழையினால் சக்கரம் வழுக்கி சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் உருண்டது” என்றார்.
அரசு போக்குவரத்து கழக உதகை கிளை மேலாளர் (நிர்வாகம்) கணேசன், “விபத்து குறித்து விசாரித்து வருகிறோம். 34 பேர் பயணம் செய்துள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். பிறருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பெருமபாலானோர் கோவைக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
ஓட்டை உடைசல் பேருந்துகள்:
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வழித்தடத்தை கருத்தில் கொண்டு புதிய பேருந்துகள் இயக்க வேண்டும். ஆனால், சமவெளிப்பகுதிகளில் ஓடி பழுதான பேருந்துகளை மாவட்டத்தில் இயக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சு.மனோகரன் கூறும்போது, “நீலகிரி மாவட்டத்தில் போதுமான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. மேலும் சமவெளிப்பகுதிகளில் ஓடி தேய்ந்த பேருந்துகளை பெயிண்ட் அடித்து விட்டு இங்கு இயக்குகின்றனர். பெரும்பாலான பேருந்துகள் சக்கரங்கள் தேய்ந்தும், பழுதடைந்தும் இயக்கப்படுகின்றன. அவற்றிக்கான ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை. சாலையில் சக்கரங்கள் பஞ்சரானால், உதகையிலிருந்தோ அல்லது குன்னூரிலிருந்தோ சக்கரங்கள் கொண்டு வரப்பட்டு மாற்றி பேருந்துகள் இயக்க வேண்டிய நிலை உள்ளது” என்றார்.
அரசு பேருந்துகளின் தகுதி குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி ராஜூவிடம் கேட்ட போது, “தகுதி சான்றுக்கு வரும் பேருந்துகளை முழுமையாக சோதித்த பின்னர் தகுதி சான்று வழங்குகிறோம். அதற்கு பின்னர் சக்கரங்கள் மாற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. இந்நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்துக்கு புதிதாக 30 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் பயணிகள் வசதியாக பயணிக்க 52 இருக்கைகள் மட்டுமே கொண்டதாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT