Published : 14 Oct 2024 11:43 AM
Last Updated : 14 Oct 2024 11:43 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்துக - அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் காலியிடங்களை வைத்துக் கொண்டு ஆண்டுக்கு 4466 இடங்களை நிரப்புவது அதிகம் என்பதா? என்றும் தொகுதி 4 பணியிடங்களை 15 ஆயிரமாக உயர்த்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய தொகுதி 4 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கையை வெறும் 2208 மட்டுமே உயர்த்தி டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறையின்மை கண்டிக்கத்தக்கது.

தொகுதி 4 பணியிடங்களின் எண்ணிக்கையை இதற்கு மேலும் அதிகரிக்க முடியாது; இதுவே மிகவும் அதிகம் என்ற தொனியில் டி.என்.பி.எஸ்.சி அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது. 2022-ல் நடைபெற்ற தொகுதி 4 தேர்வின் மூலம் 2001-21, 2021-22, 2022-23, ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கு 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு 3380 பணியிடங்கள் வீதம் நிரப்பப்பட்டன. ஆனால், இப்போது நடத்தப்பட்ட தேர்வுகளின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 4466 வீதம் 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 1086 பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன” என்று டி.என்.பி.எஸ்.சி கூறுவது தேர்வர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு, அதாவது ஒன்றரை லட்சம் இடங்கள் நான்காம் தொகுதி பணிகள் ஆகும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு 4466 நான்காம் தொகுதி பணியாளர்களை தேர்ந்தெடுப்பதை சாதனையாக தமிழக அரசும், தேர்வாணையமும் கூறிவருவது நியாயமல்ல. தமிழக அரசின் இத்தகைய அணுகுமுறை தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் அரசு நிர்வாகமே முடங்கி விடும்.

அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நான்காம் தொகுதி பணியாளர்கள் தான் பெரும்பாலும் மக்களுக்கு நேரடியாக பணி செய்பவர்கள். அவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகள் பாதிக்கப்படும். அரசுத்துறைகளில் இப்போது காலியாக உள்ள நான்காம் தொகுதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால் ஆண்டுக்கு குறைந்தது 50 ஆயிரம் பேராவது தேர்வு செய்யப்பட வேண்டும்.

அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அரசு நிர்வாகம், இளைஞர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நான்காம் தொகுதி பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாகவாது அதிகரிக்க தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x