Published : 14 Oct 2024 09:51 AM
Last Updated : 14 Oct 2024 09:51 AM

10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியீடு

கோவை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர். | படங்கள் ஜெ.மனோகரன்.

கோவை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான 2024-25 கல்வியாண்டின் பொதுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (அக்டோபர் 14) காலை வெளியிட்டார்.

அதன்படி, “பிளஸ் 2 செய்முறைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி 7-ல் தொடங்கி பிப்ரவரி 14-ல் முடிவடையும். பிளஸ் 1 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15-ல் தொடங்கி பிப்ரவரி 21-ல் நிறைவடையும், 10-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவுபெறும்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதியும் முடிவடைகிறது.

அதேபோல், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 9 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2025 மே 19 ஆம் தேதியும் வெளியாகும்” என்று அமைச்சர் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ள பொறுப்புடன் தயாராக வேண்டும், தேர்வுக்கு அஞ்சக் கூடாது. மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் மற்றதை முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார்” என்று ஊக்கமளித்தார்.

‘மத்திய அரசு அழுத்தம்’ - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு அழுத்தம் தருகிறது. தமிழகத்துக்கான நிதியை ஒதுக்காமல் நிர்பந்தப்படுத்துகிறது. கல்வித் துறையில் நல்ல முறையில் செயல்பட்டு பிறருக்கு வழிகாட்டியாக இருக்கும் தமிழகத்தை மத்திய அரசு நெருக்குதலுக்கு உள்ளாக்குவது ஏற்புடையதல்ல.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x